லியோ பட பாடல் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் வெற்றி படங்களை தொடர்ந்து  மத்தியில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களுடன் லியோ படம் உருவாகி வருகிறது. லியோ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பு நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், லியோ படத்தின் முதல் சிங்கிள் குறித்த அறிவிப்பை ஒரு போஸ்டருடன் அப்படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

அந்த போஸ்டரில் நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பது போல் இடம்பெற்றுள்ளது. இதற்கு முதல் ஆளாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவும் கேட்டுக் கொண்டிருந்தார். இதன்பிபின், லியோ படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த முதல் பாடல் காட்சிகளில் நடிகர் விஜய் முழுவதும் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இது மேலும் எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது. அதன்படி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பசுமைத் தாயகம் புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தை மீறினால் ஐந்து ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என எச்சரித்துள்ளது. இந்த நிலையில், நடிகர் விஜய்யின் லியோ பட பாடல் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பாடல் இருப்பதால் தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் புகார் மனு அளித்துள்ளார்.
இதுதொடர்பாக கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஆர்டிஐ செல்வம் என்பவர் ஆன்லைன் வாயிலாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். போதைப்பொருள் புழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் பாடல் இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளார்.