பிரான்ஸின் சுதந்திர விழாவில் பிரதம விருந்தினராக பிரதமர் மோடி.

Kumarathasan Karthigesu

இந்திய இராணுவ வீரரும் அணிவகுப்பில் பங்கேற்பு.

எதிர்வரும் ஜூலை 14 ஆம் திகதி நடைபெறவிருக்கிற பிரான்ஸின் சுதந்திர தின நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.

இன்று வெளியிடப்பட்ட இரு தரப்புக் கூட்டறிக்கை ஒன்றில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் – புதுடில்லி இடையிலான இருதரப்புத் மூலோபாய உறவு (strategic partnership) 25 ஆண்டுகளை நிறைவு செய்வதை ஒட்டியே அதன் சிறப்பு அடையாளமாக இந்தியாவின் அரசுத் தலைவரை விழாவுக்கு அழைத்துக் கௌரவப்படுத்த பிரான்ஸ் அரசு தீர்மானித்துள்ளது.

பிரதமர் மோடியின் வருகை”இரு தரப்பு மூலோபாய உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடக்குவதற்கும் நமது காலத்தின் பெரும் சவால்களை எதிர்கொள்வதற்கான கூட்டு முயற்சிகளைத் தொடக்குவதற்கும்  வாய்ப்பாக இருக்கும்” – என்று எலிஸே மாளிகை விடுத்த செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர நாளன்று பாரிஸ் Champs-Élysées இல் நடைபெறுகின்ற பாரம்பரிய படை அணிவகுப்பில் இந்திய இராணுவத்தின் அணி ஒன்றும் பங்கேற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்ரோன் கடந்த ஆண்டில் தனது இரண்டாவது பதவிக் காலத்துக்கு அதிபராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர் அழைக்கின்ற முதலாவது வெளிநாட்டு அரசுத் தலைவர் நரேந்திர மோடி ஆவார்.