யாழ்ப்பாணத்தில் கட்டி முடிக்கப்பட்ட மிக உயரமான பௌத்த மத தூபி.
இனமொன்றின் குரல்
யாழ்ப்பாணத்தின் மிக உயரமான பௌத்த மத தூபி (Stupa) 100 அடியில் காங்கேசன்துறை, தையிட்டியில் கட்டி முடிக்கப்பட்டு இன்று பூசைகள் நடத்தப்பட்டு இருக்கிறது நல்லாட்சி அரசாங்கத்தின் போது தையிட்டி மகா வித்தியாலயத்திற்கு பின்புறமாக- கலைவாணி வீதிக்கு நெருக்கமான தனியார் காணியை ஆக்கிரமித்து திஸ்ஸ விகாரை (Tissa Raja Maha Vihara) என்கிற பெயரில் விகாரை ஒன்றை அமைத்து இருந்தார்கள் தற்போது மேற்படி விகாரையிலிருந்து 75 மீற்றர்கள் தொலைவிலுள்ள தனியார் காணிகளை ஆக்கிரமித்து 100 அடியில் குறித்த விகாரைக்குரிய பௌத்த தூபியை கட்டி முடித்து இருக்கின்றார்கள்.
இலங்கையின் உயரமான பௌத்த தூபிகளாக கருதப்படும் ருவன்வெலிசாய (338 அடி), ஜெதவனாராமய (400 அடி) அபயகிரி (246 அடி), மிரிசவெட்டி(197 அடி), தூபாராமய (66 அடி) ஆகிவற்றின் வரிசையில் தையிட்டி திஸ்ஸ ராஜா மகா தூபியும் (100 அடி) இன்று இணைந்து இருக்கிறது.
வலி. வடக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள தையிட்டி கிராமத்தில், 8 பேருக்குச் சொந்தமான விடுவிக்கப்படாத தனியார் காணியில் தான் இந்த 100 அடி தூபியை அமைத்து இருக்கின்றார்கள் இதற்கு எதிராக காணி உரிமையாளர்கள் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையாக இன்றும் இருக்கின்றது.
அதே போல குறித்த பகுதியில் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக திரு கஜேந்திரகுமார் மற்றும் திரு சுமந்திரன் ஆகியோரின் கோரிக்கையின் பேரில் வலி வடக்கு ஒருங்கிணைப்பு குழுவும் தடை விதித்து இருந்தது ஆனால் 2021 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சே அதிகாரத்தின் போது மேற்படி தூபிக்கான கட்டுமானத்தை இராணுவ தளபதியாகவிருந்த சவேந்திர சில்வா ஆரம்பித்து வைத்து இருந்தார்.
இந்த தூபியின் கட்டுமானத்தை மொரட்டுவ பல்கலைக்கழககட்டிடக்கலைப் பீடம் வடிவமைத்துள்ளதுடன், இந்த கட்டுமானத்துக்காக தொழில்நுட்ப நிபுணத்துவ தெரிவை பேராசிரியர் சமித்த மானவடு மற்றும் பேராசிரியர் நிமால் டி சில்வா ஆகியோர் வழங்கி இருக்கின்றார்கள்.
இதற்கான நிதி உதவிகளை பௌத்த சாசன அமைச்சு வழங்கி இருந்தது தனியாருக்கு சொந்தமான காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட ஒரு தூபிக்கு எதன் அடிப்படையில் பௌத்த சாசன அமைச்சு நிதி உதவி வழங்கியது என்று தெரியவில்லை சட்டவிரோத கட்டுமானங்களுக்கு ஒரு பல்கலை கழகம் ஏன் துணை போகின்றது என்றும் தெரியவில்லை உண்மையில் எல்லை கிராமங்களுக்கு இணையாக நாவற்குழி, நயினாதீவு , காங்கேசன்துறை என வெல்வேறு முனைகளில் மிக மோசமான பௌத்த மயமாக்களை யாழ்ப்பாணமும் சந்தித்து வருகின்றது.