உள்ளூராட்சி சபைத் தேர்தல் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை: ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு.

மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அதியுயர் சபையான நாடாளுமன்றமே, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வரவு – செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைத் தடுப்பதற்கு எதிராக நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை, நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயல் என்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர்.இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி நீதிமன்றத்தின் சுயாதீனத்திலும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்திலும் ஆளும் கட்சி தலையீடு செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன.

இந்த நிலையில், தேர்தலுக்கான நிதியை விடுவிக்குமாறு கோரி திறை சேரிச் செயலருக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பிய கடிதத்துக்குப் பதிலளித்த திறை சேரியின் செயலர், நிதியை விடுவிக்குமாறு  நிதி அமைச்சரான ரணில் விக்ரமசிங்கேக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்ததுடன், அவரது அனுமதியை எதிர்பார்த்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதையடுத்து, நிதியை விடுவிக்குமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவால் அதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று அதிபரிடம் கேள்வி எழுப்பிய போது, ‘தேர்தல் தொடர்பில் எனது நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை.

நான் திரும்பவும் சொல்கின்றேன் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அதியுயர் சபையான நாடாளுமன்றமே தேர்தல் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும். நாட்டின் நலன் கருதியும், மக்கள் நலன் கருதியும் நாடாளுமன்றம் எடுக்கும் தீர்மானத்தை எந்தத் தரப்பும் சவாலுக்குப்படுத்த முடியாது’ என்று ரணில் விக்ரமசிங்க பதிலளித்துள்ளார்.