சமூகத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்படும் கஷ்டங்கள் தொடரும் -ஜனாதிபதி ரணில்.

நாட்டு நிலைமையை ஸ்திரப்படுத்தியவுடன் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களின் பேச்சுரிமையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, எந்த வகையான நாசகார செயற்பாடுகளை  எதிர்கொள்வதற்கும்    கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  மற்றொரு ஜூலை 09ஆம் திகதி நாட்டில் ஏற்பட இடமளிக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி இதன்போது எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு மிகவும் கடினமான பல பொருளாதார நடவடிக்கைகளை அரசாங்கம்  எடுத்துள்ளதாகவும், தற்போது பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் சமூகத்தில் உள்ள அனைவருக்கும்  ஏற்படும்  கஷ்டங்கள் தொடரும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.