கட்டுநாயக்க விமான நிலையத்தில் 230 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய வெளிநாட்டு பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிவியா நாட்டைச் சேர்ந்த 26 வயதான பெண்ணொருவரே கைது செய்யப்பட்டதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர் 4 கிலோ 631 கிராம் கொக்கெயின் போதைப்பொருளை தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் உள்ளூர் சந்தை பெறுமதி 23 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர் இன்று காலை டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கொண்டு வரப்பட்டுள்ள கொக்கெய்ன் கரைசலில் கொக்கெய்ன் போதைப்பொருளின் செறிவு அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுவதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 500 அமெரிக்க டொலர்களை அவர் பெற்றுக்கொள்ளவிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.