ஜனாதிபதி ரணில் சந்திப்பில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கை.

இராணுவத்தினரின் வசமுள்ள காணிகளை விடுவித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கடந்த 11 ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் ஜெட்விங் ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சி.வி.விக்னேஸ்வரன் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது தன்னால் ஏற்கனவே கோரப்பட்ட விடயங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும் சொற்ப கால அவகாசம் அவசியம் எனவும் ஜனாதிபதி கூறியதாக தெரிவித்துள்ளார்.

அவரது அக்கருத்து அரசியல்கைதிகளின் விடுதலை, காணாமல்போனோரது குடும்பங்களின் கோரிக்கை மற்றும் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகளை விடுவித்தல் ஆகிய விடயங்கள் பற்றியதாகவே இருக்கும் என்று தான் கருதுவதாகவும், அவர் தமிழ்மக்களுடன் ஒன்றிணைந்து செயலாற்றுவதில் பெரிதும் நாட்டம் காண்பித்தார் எனவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை உறுதிப்படுத்தல், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கான விமானசேவையை ஆரம்பித்தல், பலாலியில் இருந்து கொழும்புக்கு விமானசேவையை ஆரம்பித்தல், திணைக்களங்களால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பிலும்  ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தாகவும் அலர் தெரிவித்தார்.அதேவேளை காங்கேசன்துறை – காரைக்கால் மற்றும் தலைமன்னார் வரையான படகுசேவை, பலாலி – சிங்கப்பூர் விமானசேவை என்பன பற்றியும்  மாகாண அபிவிருத்திப் பிணையங்களை உருவாக்குவது குறித்தும் ஜனாதிபதியிடம் பரிந்துரைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.