நீண்டகால மோதலுக்குத் தயாராக இருக்கின்றோம்-மியூனிச் மாநாட்டில் மக்ரோன் தெரிவிப்பு.

Kumarathasan Karthigesu

புடினுடன் பேச்சுவதற்கான நேரம் இதுவல்ல என்கிறார்,உக்ரைனுக்கான உதவிகளை விரைவுபடுத்தக் கோருகிறார்.

உக்ரைனில் ஒரு நீண்ட கால மோதலுக்கு மேற்குக் கூட்டணி நாடுகள் தயாராக இருக்கின்றன என்று தெரிவித்திருக்கும் மக்ரோன், மொஸ்கோவுடன் பேச்சு நடத்துவதற்கான நேரம் இதுவல்ல என்றும் கூறியிருக்கிறார்.

ரஷ்யவுக்கு எதிரான ஒரு புதிய எதிர்த் தாக்குதலைத் தொடங்குதற்காக உக்ரைன் மக்களுக்கும் அதன் ராணுவத்துக்கும் நாங்கள் எங்கள் ஆதரவைத் தீவிரப்படுத்த வேண்டும்.

அது ஒன்று தான் நம்பகரமான பேச்சுவார்த்தையை எட்டச் செய்யும் – என்றும் மக்ரோன் குறிப்பிட்டிருக்கிறார்.

சர்வதேச பாதுகாப்புத் தொடர்பான உச்சி மாநாடு ஜேர்மனியின் மியூனிச் நகரில் இன்று வெள்ளிக்கிழமை தொடங்கியிருக்கிறது. அமெரிக்கா, சீனா உட்பட 150 க்கும் மேற்பட்ட நாடுகளது தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொள்கின்ற அந்த முக்கிய மாநாட்டில் மக்ரோன் பிரதான உரையாற்றியிருக்கின்றார்.

அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹரிஸ், வெளியுறவுச் செயலர் அன்டனி பிளிங்கன், ஜேர்மனியின் சான்சிலர் ஒலாப் சோல்ஸ், சீனாவின் உயர்மட்டத் தூதர் வாங் யி (Wang Yi) நேட்டோ கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் (Jens Stoltenberg) ஆகியோரும் அந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.

வழமையாக மியூனிச் மாநாட்டில் பங்கேற்கின்ற ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergei Lavrov) தலைமயிலான குழுவினர் இந்த முறை மாநாட்டுக்கு அழைக்கப்படவில்லை.

உக்ரைன் அதிபர் ஷெலென்ஸ்கி மியூனிச் மாநாட்டைத் (Munich Security Conference) தொடக்கி வைத்து வீடியோ லிங் மூலமாக அங்கு தோன்றி உரையாற்றினார்.

இந்தப் போரில் “உக்ரைனின் வெற்றிக்கு மாற்று ஏதும் இல்லை”. என்று அவர் தனது உரையில் அறிவித்தார்.

நாங்கள் விரைந்து செல்ல வேண்டும். எங்களுக்கு வேகம் தேவை. எங்கள் முடிவுகளின் வேகம், உடன்பாடுகளின் வேகம், எங்கள் விநியோகத்தின் வேகம் என்பனவே ரஷ்யாவின் சக்தியைக் கட்டுப்படுத்தும். வேகத்திற்கு மாற்று இல்லை, ஏனெனில் இந்த வேகத்திலேயே நம் வாழ்க்கை சார்ந்துள்ளது,”-என்று அவர் கூறினார்.

” அதிபர் புடினின் ஆக்கிரமிப்பின் கடைசி நிறுத்தமாக உக்ரைன் இருக்கப் போவதில்லை. கீவுக்குப் போர் டாங்கிகளை வழங்குவதற்கு நேட்டோ நாடுகள் திணறிக் கொண்டிருக்கின்ற சமயத்தில் புடின் மோல்டோவா நாட்டின் கழுத்தைத் திருகுவதற்குத் திட்டமிடுகிறார். எனவே தாமதம் என்பது எப்போதுமே தவறுதான்” -இவ்வாறு ஷெலென்ஸ்கி தனது உரையில் குறிப்பிட்டார்.

ஜேர்மனியின் சான்சிலர் ஒலாப் சோல்ஸ் தனது உரையில்,”வரலாற்றில் தடவையாக அணு ஆயுத சக்தி கொண்ட ஒரு நாடு ஐரோப்பிய மண்ணில் ஓர் ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்துகின்றது” – எனக் குறிப்பிட்டார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இந்த மாதம் ஓராண்டைக் கடக்கின்றது. சமாதானத்துக்கான எந்த வித அறிகுறிகளும் தென்படவில்லை. மாறாக அடுத்த சில வாரங்களில் போரைத் தீவிரப்படுத்துகின்ற ஆயத்தங்களில் இரண்டு தரப்புகளும் முழு மூச்சாக இறங்கியுள்ளன. நேட்டோ கூட்டணி நாடுகளது பேரழிவு ஆயுதங்கள் பெருந் தொகையில் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. வரவிருக்கும் வசந்த காலப் பகுதியில் ஐரோப்பிய மண் ஒரு கடும் போரைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் தெளிவாகத் தெரிகின்றன.