பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பிற்கு எல்.முருகனிடம் தமிழர் தரப்புகள் கோரிக்கை.

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முத்தரப்பு பொறிமுறை உருவாக்கப்படவேண்டும் எனவும், அதை இந்தியாவால் மாத்திரமே செயற்படுத்த முடியும் என்றும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்துதர வேண்டும் என மற்றொரு தமிழ் அரசியல் கட்சியின் தலைவரான செல்வம் அடைக்கலநாதன் கோரியுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பா.ஜ.க. தமிழகத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை யாழ். நகரிலுள்ள ஹோட்டலில் சந்தித்தனர்.இந்தச் சந்திப்பின்போதே, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியாகத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தலைவர்கள் மேற்படி கோரிக்கையை முன்வைத்தனர்.

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்ட சிலர் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கோரியிருந்தனர். அவ்வாறு கோரிக்கை வைப்பதன் ஊடாக மாத்திரம் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டுமென்றால், இலங்கைத் தமிழர்கள், இலங்கை அரசாங்கம், இந்திய அரசு என்ற முத்தரப்பு பொறிமுறை உருவாக்கப்படவேண்டும். அதை இந்திய அரசு செய்யவேண்டும்’ – என்ற கோரிக்கையை முன்வைத்தாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை ஒழுங்கமைத்துத் தருமாறு இந்தச் சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை முன்வைத்தார்.