ஐரோப்பா வீடுகளில் பாலியல் அடிமைகளாக சீன பெண்கள்.

ஐரோப்பிய நாடுகளில் பல வீடுகளில் சீனாவை சேர்ந்த இளம்பெண்களை பாலியல் அடிமைகளாக பிடித்து வைக்கப்பட்ட தகவல் பற்றி யூரோபோல் போலீசாருக்கு சென்றுள்ளது. இதுபற்றி அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். ஐரோப்பிய யூனியன் அமைப்பின் சட்ட அமலாக்க அமைப்பான யூரோபோல் நடத்திய அதிரடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளன.

இதற்காக, 3 ஆண்டுகளாக ஆன்லைன் வழியே மேற்கொள்ளப்படும் விளம்பரங்களை அவர்கள் கண்காணித்தனர். இதில், இதுவரை பாதிக்கப்பட்ட 200 இளம்பெண்கள் மீட்கப்பட்டு உள்ளனர் என யூரோபோல் தெரிவித்து உள்ளது. சீன இளம்பெண்களை ஆன்லைன் வழியே விளம்பரம் செய்து கவர்ந்து இழுத்து, ஐரோப்பிய ஓட்டல்களில் பணியமர்த்துகின்றனர். அதன்பின் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் சுழற்சி முறையில் அவர்களை விபசாரத்தில் தள்ளுகின்றனர்.

நல்ல வேலை, சம்பளம் என நம்ப வைத்து ஆன்லைனில் வரும் விளம்பரங்களை நம்பி செல்லும் சீன இளம்பெண்கள் இறுதியில் விபசாரத்தில் தள்ளப்பட்டு உள்ளனர். இதற்காக சீனாவில் பிரபல தகவல் அனுப்பும் செயலிகளை குற்றவாளிகள் பயன்படுத்தி வந்துள்ளனர். அதன் வழியே இளம்பெண்களை அவர்கள் ஈர்த்து உள்ளனர்.

இதன்பின் தங்களிடம் சிக்கும் சீன பெண்களை ஐரோப்பிய யூனியனுக்கான போலியான அடையாள அட்டை, ஆவணங்களை தயாரித்து மற்றும் குடியுரிமை அனுமதியையும் ஏற்பாடு செய்து பின்னர் அவர்கள் நாடு கடத்தப்படுகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் வீடுகளில் பணய கைதிகளாக பிடித்து வைக்கப்படும் அவர்கள், கடனை திருப்பி செலுத்த முடியாமல் அதற்கு பதிலாக, பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்படும் அவலம் நடந்து உள்ளது.

3 ஆண்டு விசாரணை முடிவில் 200 பேர் மீட்கப்பட்டபோதும், இது மிக குறைவு என்றும் வெளியே வராமல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்றும் யூரோபோல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதற்காக பெல்ஜிய நாட்டு போலீசார், அந்நாட்டு அரசு வழக்கறிஞர் தலைமையில் நடத்திய அதிரடி சோதனையில் ஸ்பெயின், ஜெர்மனி, போலந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பலரை மீட்டு உள்ளனர். சுவிட்சர்லாந்தில், கடந்த 2022-ம் ஆண்டு மே மாதத்தில் இந்த கும்பலுக்கு எதிராக நடந்த சோதனையில் 7 பேர் மீட்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 7-ந்தேதி பெல்ஜியம் நாட்டின் பிரஸ்சல்ஸ், ஆன்ட்வெர்ப் மற்றும் சார்லெராய் நகரங்களில் மற்றும் ஸ்பெயின் நாட்டின் அலிகேன்டெ மற்றும் பார்சிலோனா நகரங்களில் 34 வீடுகளில் நடந்த சோதனையில், 28 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் 27 பேர் பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் ஸ்பெயினில் மீட்கப்பட்டார். இதுபோன்று ஐரோப்பாவில் யூரோபோல் அமைப்பினரால் அதிகம் தேடப்படும் பட்டியலில் உள்ள 5 சீன நாட்டினரை பெல்ஜியம் நாட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சொந்த நாட்டு இளம்பெண்களையே, பணத்திற்காக விலை பேசும் சீனர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.