நிகரகுவா ஆயர் Álvarezக்கு 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை.

 

2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அரசுக்கு எதிரான தவறான செய்திகளை பரப்பியதற்காக குற்றம் சாட்டப்பட்டு சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் ஆயர் Álvarez.

Matagalpa மறைமாவட்ட ஆயரும், Estelí, மறைமாவட்டத்தின் நிர்வாகியுமான ஆயர் Rolando José Álvarez அவர்களுக்கு நிகரகுவா நீதிமன்றம் 26 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை அளித்துள்ளது.

பிப்ரவரி 10, வெள்ளிக்கிழமையன்று, நிகரகுவாவில் இருந்து அமெரிக்காவின் வாசிங்டனுக்கு 222 பேர் நாடுகடத்தப்பட்ட நிலையில் 56 வயதான ஆயர் Álvarez அவர்களுக்கு  26 ஆண்டுகள், அதாவது 2049ஆம் ஆண்டு வரை நிகரகுவா நீதிமன்றம் சிறைதண்டனை விதித்துள்ளது.

“தேசிய ஒருமைப்பாட்டைக் குறைவாக மதிப்பிடும் தவறான செய்திகளைத் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் வழியாகப் பரப்பியதாகவும் இதன்வழியாக நிகரகுவா மாநிலத்திற்கும் சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார் ஆயர் Álvarez.

பிப்ரவரி 15ஆம் தேதி விசாரணை தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் முன்னதாக தண்டனை முடிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் ஆயர் Álvarez தவிர Manuel García, José Urbina என்னும் Granada மறைமாவட்ட அருள்பணியாளர்கள் இருவரும் நிகரகுவா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நிகரகுவா அரசுத்தலைவர் Daniel Ortega,  ஆயர் Álvarez அவர்களின் சிறைத்தண்டனை குறித்து தேசிய தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்துள்ள செய்தியில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதால் அவருக்கு 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்றும் தெரிவித்துள்ளார்.

வீட்டுக்காவலில் இருந்து கடுங்காவல்சிறைக்கு

2007ஆம் ஆண்டு நிகரகுவாவின் அரசுத்தலைவராக Daniel Ortega மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட முதல் ஆயர் Álvarez ஆவார். ஆகஸ்ட் 19 அன்று விடியற்காலையில் Matagalpaவின் ஆயர் இல்லத்திலிருந்து காவல்துறை அதிகாரிகளால், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள் பொதுமக்கள் என அனைவருடனும் சிறைபிடிக்கப்பட்டார். நிகரகுவா அரசை சீர்குலைக்கவும், அரசியலமைப்பு அதிகாரிகளைத் தாக்கும் நோக்கத்துடன் வன்முறை குழுக்களை ஒருங்கிணைக்கவும் முயற்சித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு 15 நாள்கள் வலுக்கட்டாயமாகச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் மனாகுவாவில் உள்ள அவரது இல்லத்தில் வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்ட அவர், தற்போது 26 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.