சுதந்திர தினத்தை கருப்பு தினமான அனுஸ்ரிபோம்-காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் கருப்பு தினமான அனுஸ்ரிக்கின்றோம் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் ஒன்றிய தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

மன்னாரில் இன்று ஞாயிற்றுக்கிழமை(29) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. எனினும் சுதந்திரம் இல்லாத நாட்டில் சுதந்திர தினம் எதற்காக? என்பதன் அடிப்படையில் தமிழர்களாகிய நாங்களும் குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் அன்றைய நாளை கருப்பு  தினமாக அனுஷ்டிக்க இருக்கின்றோம்.

பல்கலைக்கழக மாணவர்கள் முன் நின்று ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளார்கள். எனவே கருப்பு தினத்தை அனுஷ்டிக்க மன்னார் மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்கள், அரசியல் பிரதிநிதிகள் பொதுமக்கள், உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

எதிர்வரும் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை(29) யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மன்னாரிற்கு வருகை தர உள்ளனர். இதன் அனைவரும் அவர்களுடன் இணைந்து கொள்ள வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து எங்களுக்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும்.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் சுமார் 14 வருடங்களாக வீதியில் நின்று போராடி வருகிறோம்.

எங்களுடைய போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் எங்களுடன் இணைந்து கொள்கிறார்கள்.

இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் கருப்பு தினமான அனுஸ்ரிக்கின்றோம்.

இந்த அரசாங்கத்தை நாங்கள் நம்பவில்லை.ஒவ்வொரு மாதமும் நாங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகிறோம்.

சர்வதேச நாடுகளும் இது வரை எமக்கு உரிய தீர்வை பெற்றுத் தரவில்லை.காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய 128 தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த உறவுகள் காணாமல் ஆக்கப்படட தமது உறவுகள், பிள்ளைகள் வருவார்கள் என்று ஏங்கித் தவித்த நிலையில் அவர்கள் மரணித்துள்ளனர்.

எனவே சுதந்திர தினத்தை முன்னிட்டு  எமது கருப்பு தின போராட்டத்திற்கு அனைத்து தரப்புகளும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

எதிர்வரும் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் எமது கருப்பு தின போராட்டம் இடம் பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.