கூட்டமைப்பின் தலைமையில் இருந்து சம்பந்தன் விலக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சி அறிவிப்பு.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து சம்பந்தன் விலக்கப்பட்டுள்ளதாக  ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர்   அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு மிகுந்த பின்னடைவை சந்தித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தனித்துவமாக  தேர்தலில் போட்டியிட்டுவதற்கு தயாராகி வருகிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 49 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பின்னர் தந்தை செல்வாக்கு பின்னர் அந்த கட்சி செயலிழக்கப்பட்டு ஒரு சந்தர்ப்பவாத அரசியல் போக்கோடு செயல்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகும் வரைக்கும் தமிழரசு கட்சி ஒரு செயலிழந்த கட்சியாகவே பார்க்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பும் ஊடகப் பேச்சாளர் பொறுப்பும் எங்களிடமே இருக்கின்றது என்று தமிழரசு கட்சி கூறி வருகின்றது. உண்மையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐந்து கட்சிகளைக் கொண்டு தற்போதைய காலத்தின் தேவை உணர்ந்து ஒரு புதிய பரிணாம வளர்ச்சி கண்டு நிற்கின்றது. இந்த சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தனித்துவமாக தமிழரசு கட்சி இல்லாமல் செயல்பட்டு வருகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து சம்பந்தன் ஐயா விலக்கப்படுகின்றார். கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரன் விலக்கப்படுகின்றார் என அவர் தெரிவித்தார்.

சம்பந்தன் ஐயா வெறுமனே திருகொணமலை மாவட்டத்தின் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகவும், சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்ற நிலை இங்கே உருவாகி இருக்கின்றது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் என்பது கூட்டுத் தலைமைத்துவமாக மிக விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.  சம்பந்தனே கூட்டமைப்பின் தலைவராகத் தற்போதும் பதவி வகிக்கின்றார் என  வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று தனது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். விரும்பினால் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடி அவரைப் பதவியிலிருந்து நீக்கலாம் அல்லது அவர் விரும்பினால் தாமாகவே பதவியிலிருந்து விலகலாம். அதைவிடுத்துக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பதவி  பறிக்கப்படுள்ளது எனச் சொல்வது நீண்ட வரலாற்றைக் கொண்டு ஒரு தலைவரை அவமதிக்கின்ற ஒரு கூற்றாகும். அதை நான் கடுமையாக ஆட்சேபிக்கின்றேன் என அவர் தெரிவித்தார்.