மூத்த அருட்சகோதரி ஆன்ட்ரே 118 ஆவது வயதில் மறைந்தார்.

Kumarathasan Karthigesu

170

உலக அளவில் வயதில் மிக மூத்த கன்னியாஸ்திரியாக மதிக்கப்பட்ட ஆன்ட்ரே(Andre) தனது 118 ஆவது வயதில் காலமானார் என்று அறிவிக்கப்படுகிறது. பிரான்ஸின் தென் பகுதியில் முதலாவது உலகப் போருக்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக 11,பெப்ரவரி, 1904 ஆம் ஆண்டில் பிறந்த அவரது இயற் பெயர் லூசில் ராண்டன் (Lucile Randon) ஆகும்.

Toulon நகரில் அவர் தங்கி வாழ்ந்த மூதாளர் காப்பகத்தில் இன்று புதன் விடிகாலை 02.00 மணியளவில் உறக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது என்ற தகவலைப் பேச்சாளர் ஒருவர் வெளியிட்டிருக்கிறார். “இது மிகவும் துயரமான செய்தி. ஆனாலும் அவர் தனது விருப்பப்படி தனது சகோதரரிடம் சென்று சேர்ந்துவிட்டார். அவரைப் பொறுத்தவரை இது அவருக்கு ஒரு விடுதலை “-என்று Sainte-Catherine-Laboure மூதாளர் காப்பகத்தின் பணிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.

உலகில் நீண்ட காலம் உயிரோடு வாழ்ந்த வயதில் மூத்தவர் என்ற சாதனையைக் கொண்டிருந்தவராகிய ஜப்பானியப் பெண் கேன் ரெனாகா (Kane Tanaka) தனது 119 ஆவது வயதில் கடந்த ஆண்டு காலமானார். அதன் பிறகு கன்னியாஸ்திரி ஆன்ட்ரே அவரது இடத்தைப் பிடித்தார். அதிக காலம் உயிர்வாழ்பவர் என்று கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் அவரது பெயர் பதியப்பட்டது.

ஆன்ட்ரே புரொட்டஸ்தாந்து(Protestant) குடும்பம் ஒன்றில் வளர்ந்தவர். தனது 26 ஆவது வயதில் கத்தோலிக்கராக மாறி ஞானஸ்தானம் பெற்றுத் தனது 41 ஆவது வயதில் கன்னியாஸ்திரியாக அறப்பணியில் இணைந்தார். பின்னர் 31 வருடங்கள் விச்சியில் (Vichy) உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றினார்.

முதலாம் உலகப் போரின் போது இறந்து விட்டனர் எனக் கருதப்பட்ட ஆன்ட்ரேயின் இரண்டு சகோதரர்கள் மீண்டும் உயிருடன் திரும்பி வந்ததை மறக்க முடியாத அனுபவம் என்று அவர் தனது 116 ஆவது பிறந்த நாளின் போது ஏஎப்பி செய்திச் சேவையிடம் தெரிவித்திருந்தார்.

பார்வை இழந்து சக்கர நாற்காலியில் அமர்ந்த நிலையிலும் தன்னிலும் வயதில் குறைந்த பலருக்கு உதவி வந்தவர். தனது பணியும் பிறரைக் கவனித்துக்கொள்வதும் தனக்கு உற்சாகம் அளித்ததாக அவர் முன்பு தெரிவித்திருக்கிறார்.

“வேலை எங்களைக் கொன்றுவிடும் என்று பலரும் பயப்படுகிறார்கள். வேலை என்னை உயிரோடு வைத்திருந்தது. 108 வயதுவரை வேலை செய்தேன்”

“மக்கள் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும், வெறுப்பதற்குப் பதிலாக ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். அதையெல்லாம் நாம் பகிர்ந்து கொண்டால், விஷயங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும்,”-இவ்வாறு ஆன்ட்ரே ஒருதடவை தன்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

தனது” ஆயுளின் ரகசியம் நல்ல ஆண்டவருக்கே தெரியும் “எனக் கூறி வந்த அவர், ஆயுளின் வல்லமையை அறிவதற்காக அவரது தலை முடி, மற்றும் டிஎன்ஏ மூலக் கூறுகளை (DNA samples) வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்க மறுத்து விட்டார்.

2021 இல் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய அவர் பின்னர் அதிலிருந்து மீண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.