தமிழரசுக் கட்சி வெளியேறினாலும் கூட்டு பலமடைந்துள்ளது: வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு.

 

தமிழரசுக் கட்சி வெளியேறினாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்கள் மீள இணைந்துள்ளமையால் இந்த கூட்டு பலமடைந்துள்ளது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இந்த கூட்டில் இணைய வேண்டும்  என அழைப்பு விடுத்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அலுவலகத்தில் நேற்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித் தனியாக பிரிந்து உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்இ இறுதியாகஇ மூன்று கட்சிகள் கூட்டமைப்பில் இணைந்து பயணித்தன. நானும் சித்தார்த்தன் அவர்களும் கட்சி ரீதியாக தமிழரசுக் கட்சிக்கு கடிதம் எழுதினோம்.

ஏனைய கட்சிகளையும் அரவணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தி அதனூடாக எமது வலுவான ஒற்றுமையை காண்பிக்க முடியும்; மக்களது அபிலாசைகளையும் வென்றெடுக்க முடியும். நாங்கள் ஆறு கட்சிகளும் இணைந்து ஐ.நா சபைக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதினோம். அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டு ஏனைய தேசிய கட்சிகளையும் உள்ளெடுப்பது தொடர்பாக சம்பந்தன் ஐயாவுக்கும் கடிதம் எழுதினோம். ஆனால் அவரிடமிருந்து பதில் வருவதற்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடும் என்ற முடிவை எடுத்திருந்தார்கள். எமது கோரிக்கைக்கு பதில் தராமல் இந்த முடிவை எடுத்து நாம் வெளியே செல்லும் நிலையை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

கூட்டமைப்பில் இருந்து வெளியே சென்ற கட்சிகளில் உள்ளே வர வேண்டும் என கருதிய கட்சிகளை சேர்ந்தவர்கள் தற்போது அணி திரண்டுள்ளோம்.  குறிப்பாக இந்த சந்தர்ப்பத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் எமது கூட்டில் இணைய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளை வென்றெடுக்க நாங்கள் பலமான கூட்டாக ஒற்றுமையாக பயணிக்க வேண்டும். அதனடிப்படையில் இந்த கூட்டில் வந்திணைய வேண்டும் என நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். எனவே கூட்டு என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் செயற்படுவதேயாகும்.

அதில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பங்களிப்பும் இருக்கும். தனிப்பட்ட கட்சிகளுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டுக்கொடுக்க முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக இந்த தேர்தலில் போட்டியிடும்.தேர்தல் தொடர்பில் எங்களது கடிதத்தில் எதுவும் தெரிவிக்கவில்லை. அவர்களது முடிவு கவலையளிக்கிறது. அவர்கள் தங்களது தனித்துவத்தை காட்ட வேண்டும் என நினைக்கிறார்களோ என தெரியவில்லை. எனினும் மக்கள் ஒற்றுமையைத் தான் விரும்புகிறார்கள்.கூட்டமைப்பில் இருந்து ஒரு கட்சி விலகிச் சென்றாலும் முன்னர் விலகிச் சென்றவர்கள் உள்ளே வந்துள்ளார்கள்.

அதனடிப்படையில் மக்கள் எமக்கு ஆதரவு தருவார்கள். கூட்டமைப்பு சிதைவுபட மாட்டாது. மக்கள் எமது பக்கம் இருப்பார்கள். தற்போது தேர்தலொன்று வந்துள்ளது. தேர்தல் தான் எங்களது குறிக்கோள் அல்ல. இந்த தேர்தல் முடிந்த பின் சட்ட ரீதியாக பதிவுசெய்யப்பட்ட கட்டமைப்பை உருவாக்குகின்றஇ தொடர்ச்சியான தலைமைத்துவத்தை கொண்டிருக்கின்ற மக்களது ஆலோசனைகளை பெறுகின்ற செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம். தனிப்பட்ட கட்சிகளின் விருப்பு – வெறுப்பு இங்கிருக்காது.

இது ஒரு கூட்டு. அத்துடன் சுழற்சி முறையில் தலைமைத்துவம் பேணப்படும். மக்களின் நம்பிக்கைகேற்ப நாம் பிளவுபடாமல்இ மக்கள் நலனை முன்னிறுத்தி கட்டுக்கோப்பாக செயற்பட வேண்டும். அதற்கு கூட்டமைப்பு பதிவு செய்யப்படும். பொதுச்சின்னம் தெரிவு செய்யப்படும். தற்போது பொதுச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.