பங்காளிக் கட்சிகளின் கடிதத்திற்கு, ஆராய்ந்த பின்னரே பதில்: இரா. சம்பந்தன் அறிவிப்பு

 

தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்க வேண்டும் என்று வலியுறுத்தி கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் எழுதிய கடிதம் நேற்று மாலை கிடைக்கப் பெற்றதை உறுதிப்படுத்திய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இது தொடர்பில் அவசரப்பட்டு பதிலளிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் இந்தக் கடிதம் தொடர்பில் ஆராய்வார்கள். பொறுமை காக்கவும். அவசரப்பட்டு இந்த விடயத்தில் கருத்துக் கூற நான் விரும்பவில்லை.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயகக் கட்சி. எனவே, கூட்டமைப்பின் தலைவர் என்ற ரீதியில் நான் உடனே பதிலளிக்க முடியாது. இது தொடர்பில் ஆராய்ந்த பின்னர்தான் எனது கருத்துக்களை வெளியிடுவேன்’ – என்றார்.