ஓட்டோவுடன் பஸ் மோதியதால்7 வயது சிறுமி பலி.

பதுளை, கஹட்டரூப்ப பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பிட்டிய மல் சந்தியில் ஓட்டோவும், இலங்கை போக்குவரத்து சபை பதுளை டிப்போவுக்குச் சொந்தமான பஸ்​​ஸொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 7 வயது சிறுமி பலியாகியுள்ளார்.

கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளார். அச்சிறுமியின் தாய் உட்பட மூவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டோவை அச்சிறுமியின் தாயாரே  செலுத்திச் சென்றுள்ளார்.

கஹட்டரூப்பயில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த பஸ்ஸூம்,  அம்பிட்டியவில் இருந்து முத்துமாலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஓட்டோவுமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் மரணித்த சிறுமி, முத்துமாலை கொவிபொல கெந்தகொல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு பஸ்ஸின் சாரதி கஹட்டரூப்ப பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.