ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை நோக்கி பயணிக்க தென்னிலங்கை சிங்களக் கட்சிகள் பச்சைக்கொடி.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகள் அனைத்தும் இணக்கம் வெளியிட்டுள்ளன.அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாக வைத்து, ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் தீர்வை நோக்கி பயணிப்பதற்கு தென்னிலங்கை சிங்களக் கட்சிகள் பச்சைக்கொடி காட்டியுள்ளன.

அத்துடன், காணிப்பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விவகாரங்களுக்கு உடனடித் தீர்வை காணவும் சாதக சமிக்ஞைகள் வெளியிடப்பட்டுள்ளன.நல்லிணக்கத்துக்கான விசேட சர்வகட்சிக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று மாலை 6 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.பிரதமர் தினேஷ் குணவர்த்தனஇ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோரும் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,  எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம்இ, வேலுசாமி இராதாகிருஷ்ணன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் உட்பட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் உடனடியாகக் கோரப்பட்ட தீர்வுகளுக்கு, நிறைவேற்று அதிகாரத்துறையில் இடம்பெற வேண்டிய பொறுப்பு உரிய வகையில் நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக இணக்கப்பாடொன்றுக்கு வருமாறு கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, சுதந்திர தினத்துக்கு முன்னர் அது நடக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

தீர்வு காண்பதற்கான ஒரு முடிவை எட்ட முடியவில்லையாயின் அதை எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் தான் அறிவிப்பார் எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.இதேவேளை, வடக்கு, கிழக்கு இணைப்புக்கு அமைச்சர் ஹாபீஸ் நஷீர் கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.அடுத்த சுற்றுப் பேச்சை ஜனவரி முற்பகுதியில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது எனச் சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.