காணாமல்போனோரை நீங்கள் கொன்று விட்டீர்கள்-இரா. சம்பந்தன்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால் என்ன நடந்ததென்ற உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக்கூறல் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்ததார்.

இனப்பிரச்சினைக்கான தீர்விற்காக ஜனாதிபதி அழைத்த சர்வகட்சி கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (13) மாலை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தை தலைமை தாங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில நிமிடங்கள் உரையாற்றினார். இனப்பிரச்சினை தீர்வுக்கான அவசியத்தை தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச, அலி சப்ரி ஆகியோர் உரையாற்றினர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம், அரசியல் கைதிகள் விவகாரத்தில் அரச தரப்பினால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அவர்கள் விபரித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அலிசப்ரி தெரிவித்தார்.

குறித்த கூட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இரா . சம்பந்தன்,

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால் என்ன நடந்ததென்ற உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக்கூறல் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்களின் பின்னர் தான் நல்லிண்ணக்க கூட்டத்தை கூடுகின்றீர்கள் . இதற்கு நாங்கள் ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் என சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும். காணாமல்போனோர் தொடர்பில் இனி கதைக்க வேண்டாம். காணாமல் போனவர்களை கொன்றது நீங்கள். அதனால் இதைப் பற்றி கதைப்பதில் பிரியோசனம் இல்லை. அதனால் இந்த விடயத்திற்கு முடிவு கொடுப்பதைப் பற்றி யோசனை செய்யுங்கள். காணாமல்போனோர் காணாமல் போனோர் என்று தெரிவித்து காலத்தை நீடிக்கவேண்டாம்.

தற்போது சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும் விடுவியுங்கள் என்று எடுத்துக்கூறியுள்ளேன்.

அரசியல் தீர்வு, காணி தொடர்பான பிரச்சினை, அனைத்து மாவட்டங்களிலும் காணிகள் இராணுவத்தினர், வனவளத்திணைக்களம், தொல்லியல் திணைக்களம் , மகாவலி திட்டத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் மாசி மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் முழுக் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தனர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுமந்திரன், ஆகியோர் கலந்துகொண்டனர்.