வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் நியதிச் சட்டங்கள் இரத்து செய்ய ஜனாதிபதி நடவடிக்கை.

வடக்கு மாகாண சபையின் நியதிச் சட்டங்கள் என்ற பெயரில் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா, வர்த்தமானி மூலம் அறிவித்த விடயங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என்று தெரியவருகிறது.

அரசமைப்புக்கும் சட்டங்களுக்கும் முரணாகத் தனிநபர் ஒருவர் நியதிச் சட்டங்களை ஆக்கி அறிவிக்கும் விதத்தில் வடக்கு ஆளுநரால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இந்த விடயம் தொடர்பில், கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சர் டக்லஸ் தேவானந்தா சுட்டிக்காட்டிய போது, அந்த வர்த்தமானி அறிவித்தலை நீக்கும் நடவடிக்கையை நீதி அமைச்சர் மூலம் மேற்கொள்ளலாம் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

எனினும், அன்றைய தினம் நீதி அமைச்சர் அக்கூட்டத்தில் பங்கேற்றிருக்கவில்லை. வெளிநாட்டில் இருந்தார்.இந்நிலையில், நேற்றைய தினமும் மேற்படி விவகாரம் சூடுபிடித்த நிலையில், அந்த வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, நீதி அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.