டயனா கமகே இலங்கை பிரஜையில்லை- குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவிப்பு .

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இலங்கை பிரஜையில்லை என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் டயனா கமகே பிரிட்டிஸ் பிரஜை அவருக்கு இலங்கை கடவுச்சீட்டை வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இந்த கடிதத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

குறிப்பிட்ட கடிதத்தில் 2004 முதல் டயனா கமகே பிரிட்டிஸ் பிரஜை என தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்  பிரிட்டனின் கடவுச்சீட்டை வைத்துள்ளார் எனவும்  குறிப்பிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் 2014 ஜனவரியில் டயனா கமகே என்ற இலக்கமுடைய கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளார், 2018 நவம்பர் ஐந்தாம் திகதி இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டார் எனவும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் பிரிட்டிஸ் பிரஜாவுரிமையை துறந்துவிட்டார் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லாததால் அவருக்கு புதிய இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்க முடியாது  என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

டயனா கமகேயின் விண்ணப்பங்களையும் அவர் இணைத்துள்ளார்.இதேவேளை இந்த விடயம் விவாதிக்கப்பட்டவேளை நாடாளுமன்றத்தில் காணப்பட்ட ஜனாதிபதி டயனா கமகேயின் கடவுச்சீட்டு விவகாரத்தை பெரிதுபடுத்தவேண்டாம் உங்கள் கட்சி நாடாளுமன்றம் வருவதற்காக கட்சியை தந்தவர் அவர் அதனால் இதனை பெரிதுபடுத்தவேண்டாம் என தெரிவித்துள்ளார்.