ஜெயலலிதா நினைவு நாள்: நான்கு பிரிவாக அஞ்சலி செலுத்தும் அதிமுக நிர்வாகிகள்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அதிமுகவில் இருந்து பிளவுபட்ட 4 பிரிவினரும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.  ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார மோதல் காரணமாக பல பிரிவுகளாக அதிமுக பிளவு பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு தர்மயுத்தம் என்ற பெயரில் அதிமுகவில் இருந்து விலகி ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டார். இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி அணி அதிமுகவில் இருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கிவிட்டு ஓபிஎஸ்ஐ சேர்த்துக் கொண்டது. இந்த நிலையில் 2021சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்தையும் கட்சியை விட்டு நீக்கி விட்டார்.

இந்த நிலையில் அதிமுகவை பொறுத்த வரைக்கும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் என நான்கு பிரிவாக பிளவுப்பட்டுள்ளது. இதனால் அதிமுக அடிமட்ட தொண்டர்கள் விரக்தியில் இருக்கும் நிலை தான் நீடித்து வருகிறது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்திற்கு ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்திய பிறகு ஜெயல்லிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்ட மேடையில் உறுதி மொழி எடுக்க  அதிமுகவில் உள்ள நான்கு பிரிவினரும்  கால்வதுறையில் அனுமதி கோரியிருந்தனர்.

ஆனால் காவல்துறை ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து  அதிமுகவின் முக்கிய நான்கு தலைவர்கள் நான்கு குழுவாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உள்ளனர். காலை 10 மணிக்கு  எடப்பாடி பழனிசாமி அணியும், 10.30மணிக்கு ஓ.பன்னீர்செல்வம்,11 மணிக்கு டிடிவி தினகரன், 11.30 மணிக்கு – சசிகலாவும் தனித்தனியாக மரியாதை செலுத்தியுள்ளனர்.