FIFA-சுவிட்சர்லாந்தை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது பிரேசில்.

உலகக் கோப்பை கால்பந்து- நேற்றிரவு தோகாவில் உள்ள 974 ஸ்டேடியத்தில் நடந்த ‘ஜி’ பிரிவு லீக் ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ அணியும், 5 முறை சாம்பியனுமான பிரேசில் அணி, சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது.

பிரேசில் முன்னணி வீரர் நெய்மார் கணுக்கால் காயத்தால் அவதிப்படுவதால் இந்த ஆட்டத்தில் அவர் ஆடவில்லை. அவர் இல்லாவிட்டாலும் பிரேசில் வீரர்கள் தொடக்கம் முதலே அதிவேக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுவிட்சர்லாந்து வீரர்கள் கோல் அடிப்பதை காட்டிலும் எதிரணியின் வாய்ப்பை முறியடிப்பதிலேயே கூடுதல் கவனம் செலுத்தினர்.

இதனால் பிரேசில் வீரர்களால் அவ்வளவு எளிதில் சுவிட்சர்லாந்தின் தற்காப்பு அரணை தகர்க்க முடியவில்லை. முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது. பிற்பாதியில் பிரேசில் வீரர்கள் தாக்குதல் தீவிரமானது. 66-வது நிமிடத்தில் வினிசியல் ஜூனியர் கோல் போட்டார். துரதிருஷ்டவசமாக அது ‘ஆப்சைடு’ என்று மறுக்கப்பட்டது. 83-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் கேஸ்மிரோ கோல் போட்டார்.

சுவிட்சர்லாந்து வீரர்களால் கடைசி வரை இலக்கை நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது. ஏற்கனவே செர்பியாவை வீழ்த்தி இருந்த பிரேசில் அணி 6 புள்ளிகளுடன் 2-வது சுற்றுக்குள் கால்பதித்தது. 3 புள்ளியுடன் உள்ள சுவிட்சர்லாந்து தனது கடைசி லீக்கில் செ்ாபியாவை தோற்கடித்தால் மட்டுமே 2-வது சுற்றை எட்ட முடியும்.