அமைச்சுப்பதவிகளை காட்டி எதிர்க்கட்சியில் இருந்து உறுப்பினர்களை பழி எடுப்பதற்கு அரசாங்கம் முயற்சி-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அமைச்சுப்பதவிகளை காட்டி எதிர்க்கட்சியில் இருந்து உறுப்பினர்களை பழி எடுப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

எந்த முயற்சி எடுத்தாலும் எமது கட்சியில் இருந்து ஒரு உறுப்பினரும் முட்டாள்தனமான அரசாங்கத்தில் இணையப்போவதில்லை.

அத்துடன் இலவச சுகாதாரதுறை மற்றும் கல்வித்துறையை தனியார் மயப்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் உறுதியளித்துள்ளீர்களா? என கேட்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதனிக்கிழமை (9) இடம்பெற்ற பெறுமதி சேர் வரி சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்ட நாட்டை வங்குரொத்து அரசாங்கத்தின் மூலம் மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியம் பாலமாக அமைந்துள்ளது என்று கூறுகின்றனர்.

அப்படியென்றால் ஏன் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்டத்தில் மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை வெளியிடாமல் இருக்கின்றது. நாட்டுக்கு அதனை வெளிப்படுத்த அரசாங்கம் ஏன் அச்சப்படவேண்டும் என கேட்கின்றோம்.

அத்துடன் பல்வேறு வரிகளை அதிகரிக்கும் போது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளையே செயற்படுத்துகின்றோம் என்று ஜனாதிபதி கூறுகின்றார்.

அப்படியென்றால்  விலை, கட்டண அதிகரிப்புகளுக்கும் இதுவா காரணம். உடன்படிக்கைகளை மறைத்துக்கொண்டு செயற்படும் அரசாங்க்ததுடன் இணைந்து செயற்படுமாறு அரசாங்கம் அழைக்கின்றது.

அத்துடன் இந்த நாட்டின் இலவச சுகாதார துறை, கல்வித்துறையை தனியார் மயப்படுத்த சர்வதேச நாணய நிதியத்திடம் வாக்குறுதி அளித்திருக்கின்றதா என ரசாங்கத்திடம் கேட்கின்றோம்.

சில பிரதான அரச வைத்தியசாலைகளில் கட்டணங்களுடன் சில சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்ள புதிதாக ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சுகாதார துறையை தனியார் மயப்படுத்தவதா? என்று அரசாங்கத்திடம் கேட்கின்றோம்.

அத்துடன் திருட்டுத்தனமான ஒப்பந்தங்களின் மூலம் பொருளாதாரத்தை சீர்குலைக்க இவர்கள் முயற்சிக்கின்றனர்.  இதுவே மொட்டின் கொள்கையாகும்.

நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்.  இத்தனைக்கும் மத்தியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

இந்த முட்டாள்தனமான அரசில் இணைவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து எவரும் இல்லை. அரசாங்கம் எமது கட்சியில் இருந்து பழி எடுப்பதற்கு பயந்து நாங்கள் யாரையும் வெளிநாடுகளுக்கு அனுப்பவில்லை. எமது உறுப்பினர்கள் மீது எமக்கு நம்பிக்கை இருக்கின்றது என்றார்.