உலகின் சிறந்த மதங்கள் அமைதிக்காக ஒன்றிணைய வேண்டும் – சர்வமத மாநாட்டில் போப் ஆண்டவர் பேச்சு.

பஹ்ரைன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று தலைநகர் மனாமாவில் அந்த நாட்டின் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீபாவில் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வமத உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் “உலகம், 2 எதிரெதிர் கடல்களை போல பிரிந்து செல்வதாகத் தோன்றினாலும், மதத் தலைவர்கள் ஒன்றாக இருப்பது அவர்கள் மோதலுக்குப் பதிலாக சந்திப்பதற்கான பாதையைத் தேர்ந்தெடுத்து, ஒரே நீரில் பயணம் செய்ய விரும்புகிறார்கள் என்பதற்கு சான்றாக உள்ளது.

உலகின் சிறந்த மதங்கள் அமைதிக்காக ஒன்றிணைந்து செயல்படவேண்டும்” என்றார். தொடர்ந்து உக்ரைன் போர் குறித்து பேசிய போப் ஆண்டவர், “நாம் குழந்தைத்தனமான காட்சியைக் காண்கிறோம். மனிதகுலத்தின் தோட்டத்தில், நமது சுற்றுப்புறங்களை வளர்ப்பதற்குப் பதிலாக, நெருப்பு, ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் போன்ற சோகத்தையும் மரணத்தையும் தரும் ஆயுதங்களுடன் விளையாடுகிறோம்.

நமது பொதுவான வீட்டை சாம்பல் மற்றும் வெறுப்பால் மூடுகிறோம். சமாதான பேச்சுவார்த்தைகள் மூலம் உக்ரைனில் ரஷியாவின் போருக்கு முடிவுகட்டுதல் அவசியமாகும்” என கூறினார். இந்த மாநாட்டில் முன்னணி முஸ்லிம் இமாம்கள், உலகின் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் தலைவர் மற்றும் நீண்ட காலமாக மதங்களுக்கு இடையேயான உரையாடலில் ஈடுபட்டுள்ள அமெரிக்க மதகுருக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.