இலங்கை இளைஞர்கள் மத்தியில் அபாயகரமான ‘இரசாயன பாலுறவு: மருத்துவர் அதிர்ச்சித் தகவல்.

கொழும்பு வாழ் இளைஞர்கள் மத்தியில் அபாயகரமான ‘இரசாயன பாலுறவு அதிகரித்து வருவதாக பாலியல் நோய்கள் மற்றம் எயிட்ஸ் கட்டுப்பாட்டு செயற்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டி ஆரச்சி தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுடனான கலந்துரையாடலொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, எச்ஐவி தொற்றாளர் அதிகரிப்பு என்பவற்றுக்கு மத்தியில் தற்போது இரசாயன பாலுறவு என்ற புது அச்சுறுத்தலுக்கு இளைஞர்கள் உள்ளாகியுள்ளனர்.

மதுபானம் மற்றும் சில போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், கெமிக்கல் செக்ஸ் என அறியப்படும் இரசாயன பாலுறவு  தற்போது இலங்கையிலும் பிரபலமாகி, பாலியல் ரீதியாக பரவும் நோய்களின் அபாயத்தை உயர்த்தியுள்ளது.

நாட்டில் தற்போது எச்ஐவி தொற்றாளர் அதிகரித்து வருகின்றமைக்கு இத்தகைய பாலியல் கலாசாரமும் ஒரு முக்கிய காரணம் என்பது கவலைக்குரிய விடயம் எனத் தெரிவித்த அவர், இளைஞர்களிடையே கோனோரியா மற்றும் சிபிலிஸ் போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதாக சுகாதார தரப்புகள் தெரிவிக்கின்றன.தம்மிடம் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் தாம் எவ்வாறு இவ்வாறான நோயினால் பாதிக்கப்பட்டனர் என்பதை பெரும்பாலும் வெளிப்படுத்துவதில்லை என வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.