ஒழுங்கான வீஸா இன்றிப் பணியாற்றும் தொழிலாளருக்கு வதிவிட உரிமை.

உள்துறை அமைச்சு அறிவிப்பு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.

புத்தாண்டில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்ற புதிய குடியேற்றம் தொடர்பான சட்ட மூலத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அவர்கள் புரிகின்ற பணியின் அடிப்படையில் விசேட வதிவிட உரிமை (un titre de séjour métier) வழங்குகின்ற ஒரு திட்டமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் போதிய பணியாளர்கள் இல்லாது நெருக்கடியின் கீழ் இயங்கும் தொழில்துறைகளில் அல்லது மூடப்படவேண்டிய நிலையில் உள்ள தொழில் துறைகளைப் (‘métier en tension’) பாதுகாப்பதற்காக அங்கு ஏற்கனவே உரிய வீஸா அனுமதிகள் இல்லாமல் ஒழுங்கற்ற விதத்தில் பணியாற்றிவருகின்ற வெளிநாட்டவர்களுக்காகப் புதிய வதிவிட அனுமதியை (un titre de séjour métier) அறிமுகப்படுத்தும் யோசனை அதுவாகும்.

தற்சமயம் உணவகம் போன்ற சில துறைகளில் வீஸா இன்றி நீண்ட காலம் பணிபுரிவோர் தங்களது தொழிலின் அடிப்படையில் வதிவிட அனுமதி கோரி விண்ணப்பிக்கின்ற வாய்ப்பு உள்ளது. அதன் கீழ் குறைந்தது ஒரு வருட வதிவிட அனுமதி சில சந்தர்ப்பங்களைப் பொறுத்து அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.அதே போன்ற ஒரு திட்டத்தையே குடியேற்றிகள் சட்டத்துக்குள் சேர்க்கும் யோசனையை அரசு தயாரித்துள்ளது.

இந்த வதிவிட அனுமதி தொடர்பான விவரங்களை உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா (Gérald Darmanin) தொழில் அமைச்சர் ஒலிவியே டுஸோப்ட்(Olivier Dussopt) இருவரும்  முன்னணிப் பத்திரிகை ஒன்றிடம் வெளியிட்டுள்ளனர். அந்தச் செய்தி வெளியான கையோடு தீவிர வலதுசாரித் தலைவர்களிடம் இருந்து திட்டத்துக்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பி உள்ளது.

அண்மையில் லோலா என்ற சிறுமி அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்த வதிவிட அனுமதி அற்ற யுவதி ஒருவரால் கொலை செய்யப்பட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்ட சம்பவத்தை அடுத்து வெளிநாட்டுக் குடியேறிகள் தொடர்பான விவாதங்கள் தேசிய அரசியலில் சூடு பிடித்துள்ளன. அந்தக் கட்டத்தில் அரசின் இந்த வதிவிட உரிமைத் திட்டம் “எரியும் நெருப்பில் மேலும் எண்ணெய்” வார்த்திருக்கிறது.

தீவிர வலதுசாரி மரீன் லூ பென் மற்றும் வலதுசாரி கடுப்போக்குத் தலைவர்கள் இந்த வீஸா திட்டத்தைக் கடுமையாகச் சாடிக் கருத்து வெளியிட்டுள்ளனர்.

“இது ஒரு பெருமெடுப்பிலான வதிவிட வீஸா வழங்கும் திட்டம் அல்ல. வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரிகின்ற துறைகளின் தேவை கருதித் தற்காலிகமாக வழங்குகின்ற குறுகிய கால வதிவிட அனுமதிதான். நாடு கடத்தப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு வழங்குகின்ற வதிவிட அனுமதி அல்ல” என்று அமைச்சர் டாமன்னா எதிர்க்கட்சிகளுக்குப் பதிலளித்திருக்கிறார்.

பிரான்ஸுக்கு வருகின்ற பல்லாயிரக்கணக்கான குடியேறிகளில் புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேன்முறையீடு செய்துவிட்டுக் காத்திருப்போர் மற்றும் முறையான ஆவணங்கள் இன்றித் தங்கியிருப்போர் எனப் பெரும் எண்ணிக்கையானோர்

உணவகங்கள், உணவைக் கொண்டு சென்று விநியோகிக்கும் சேவைகள், கட்டடத் தொழில் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றிவருகின்றனர்.