“இனியும் சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம்-கே.வி.தவராசா.

“இனியும் சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறிய விடயத்தை நான்  முற்று முழுதாக ஏற்கின்றேன்” என்று ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைக் தலைவருமான கே.வி.தவராசா, இன்று (30) தெரிவித்தார்

யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கூறிய இந்த விடயத்தை 2010ஆம் ஆண்டு, நான் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டதில் இருந்து தொடர்ச்சியாக 12 ஆண்டுகளாக நான் கூறிக்கொண்டு வருகிறேன்” என்றார்.

கட்சி என்று வருகையில், கட்சிக்குள் முடிவு எடுக்கும் போதும் அக்கட்சியில் உள்ள அனைவராலும் சேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்றும் தலைவர் ஒரு முடிவை எடுத்தாலும்,  கட்சியில் உள்ளவர்கள் மத்தியிலும் கேட்கப்பட வேண்டும் அல்லது மத்திய குழுவில் உள்ள எம்.பிகள் குழுவாக இருந்த கூட அங்கேயும் ஒன்றிணைந்து முடிவெடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அந்த முடிவு ஒரு குழுவான முடிவாக இருக்க வேண்டும் எனவும் தொடர்ச்சியாக நீண்ட காலமாக தான் இதை வலியுறுத்தி வருவதாகவும் தன்னிச்சியான முடிவுகள் தான் தமிழரசு கட்சி இந்த நிலைக்கு தள்ளப்பட்டு என்பதற்கு காரணம், என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பற்றி நாம் பேசவில்லை என்றும் கூறினார்.

எந்த விடயத்தை எடுத்தாலும் தன்னிச்சையான முடிவை எடுப்பதை எப்போது நிறுத்துகிறார்களோ அப்பொழுதுதான் தமிழரசுக் கட்சி நிலைத்து நிற்கும் ஸ்ரீதரன் அவர்கள் கூறிய கருத்தினை ஏற்றுக் கொள்கின்றேன் என்றும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்திலே ஆதரிப்பதா இல்லையா என்பதை முடிவினை எடுத்து அதில் பெரும்பாலும் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் ஆனால் பாராளுமன்ற குழுவில் அவ்வாறு முடிவு வரவில்லை என்றும் தெரிவித்தார்.

ஆனால் பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஆதரிப்பதா, இல்லையா என்ற நிலைப்பாட்டில் இருந்து வாக்களிக்காமல் சுமந்திரன் வெளியேறு சென்று விட்டார் என்று குறிப்பிட்ட அவர், இதே சுமந்திரன், யாராவது வாக்களிக்காமல் செல்வார்களா இருந்தால், புறக்கணிப்பவர்களாக இருந்தால் அவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று கூறி இருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஆனால், அன்றைய செயற்பாட்டை பார்க்கும்போது அப்படிக் கூறிய சுமந்திரன், எதிர்த்து வாக்களிக்கவும் இல்லை முதுகெலும்பில்லாதவர்போல செயல்பட்டு இருக்கின்றார் என்று தவராசா குறிப்பிட்டார்.

ஒரு கட்டுக்கோப்புக்காக ஒரு கட்சிக்குள்ளே ஒரு தலைமைத்துவத்தின் முடிவாக இருந்தால் கூட, அனைவரும் ஒருங்கிணைப்போடு எடுக்க வேண்டும் எனவும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள், மக்களுக்கு தமிழ் தேசிய அரசியலை கொண்டு நடத்த வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வற்புறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

தேசிய அரசியலில் காட்டும் பங்கில், ஒரு பங்கை கூட தமிழ்த் தேசிய அரசியலை நடாத்துவதில் காட்டப்படுவதில்லை என்றும் இந்த விடயம் மாற்றம் அடையாவிட்டால், நிச்சயமாக எங்களுடைய தமிழரசுக் கட்சி வீழ்ச்சி பாதைக்கு போய்க்கொண்டிருக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.

இலங்கை தமிழரசுக் கட்சி என்பது தனியார் கம்பனியல்ல, மக்களின் கட்சி, மக்களின் உரிமை பெற்றெடுப்பதற்காக இந்த வீட்டுக்குள் வந்து குந்தியிருக்கின்றோம் தவிர இது எங்களுடைய வீடு என யாரும் மார்தட்ட முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து கடந்த 13 வருட காலத்தில் பலர் வெளியேறி பல கட்சிகள் உருவாக்கியுள்ளன என்றும் ஒரு தனி நபரின் பிழையான செயல்பாட்டினால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

குறிப்பாக உயர் நீதியரசராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன் உட்பட பலர் சென்று இருக்கின்றார்கள் எனவும் ஒவ்வொரு தடவையும் ஒரு தனி மனிதனின் செயற்பாட்டால் பலர் கட்சியை விட்டு வெளியேறும் நிலைமை காணப்படுகின்றது என்றும் குறிப்பிட்டார்.

அதாவது தமிழ் தேசியம் தேய்ந்து கொண்டு செல்கின்றது என்று தெரிவித்த அவர், இந்த தமிழ் தேசியம் தொடர்ந்து தேய்ந்து கொண்டு செல்லும் போது,  கட்சியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.