ஹாலோவீன் கொண்டாட்டத்தில் பெரும் களேபரம்! நெரிசலில் மூச்சிழந்து 146 பேர் பலி!!

Kumarathasan Karthigesu

தென் கொரியாவில் ஹாலோவீன் திருவிழாவை ஒட்டிய பெரும் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சன நெரிசலால் பல டசின் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் சியோலில் இரவு விடுதிகளுக்குப் பிரபலமான பகுதியில் சனிக்கிழமை இரவு இந்த அவலம் நேர்ந்துள்ளது. குறைந்தது 146 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 150 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

பல நூற்றுக் கணக்கான அம்புலன்ஸ் வண்டி வாகனங்களுடன் மீட்புப் பணியாளர்கள் சம்பவம் நடந்த பகுதியில் நிறைந்து காணப்படுகின்றனர். அதிபர் யூன் சுக்-யோல் (Yoon Suk-yeol) அவசரகாலக் கூட்டம் ஒன்றைக் கூட்டியிருக்கிறார்.

இடிபாடுகள் போன்ற சனக் கும்பலுக்கு அடியில் சிக்குண்டு கிடப்பவர்களை மீட்புப்பணியாளர்கள் வெளியே தூக்கி எடுத்துச் செயற்கைச் சுவாசம் அளிக்கின்ற காட்சிகள் சமூக இணைய ஊடகங்களில் பகிரப்பட்டு நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மூச்செடுக்க அவதிப்பட்ட நிலையில் பலர் வீதியோரங்களில் கிடந்து துடித்ததையும், சடலங்கள் ஒவ்வொன்றாக எடுக்கப்பட்டுப் பொதி செய்யப்படுவதையும் நேரில் காண முடிந்ததாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் விவரித்திருக்கிறார்.

கொரோனாத் தொற்று நோய்க்குப் பின்னர் மாஸ்க் இன்றி நடைபெற்ற முதலாவது பெரும் ஹாலோவீன் கொண்டாட்டம் இதுவாகும். சுமார் ஒரு லட்சம் பேர் அங்கு திரண்டிருந்தனர் என்று கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அங்குள்ள குறுகிய வழி ஒன்றின் ஊடாக இடித்துத் தள்ளியவாறு பெரும் கூட்டத்தினர் பிரவேசிக்க முயன்றபோது பெரும் நெரிசல் ஏற்பட்டுப் பலரும் நசியுண்டனர் என்று நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

உள்ளூர் பத்திரிகை ஒன்றின் தகவலின் படி பிரபலமான ஒருவர் அங்கு வருகை தந்துள்ளார் என்ற தகவலைக் கேள்விப்பட்டு அவரைக் காண்பதற்காகப் பெரும் எண்ணிக்கையானோர் அவ்விடத்தை நோக்கி ஓடிச் செல்ல முற்பட்டதாலேயே நெரிசல் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

டசின் கணக்கானோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பதால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.