கோட்டாபாயவை மேடைக்கு கொண்டுவர வேண்டாம்: ராஜபக்ச குடும்பத்திற்குள் தீர்மானம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை எந்தவொரு கூட்டத்திலும் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதற்கு பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் நம்பகமான உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலமான செயற்பாட்டாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த யோசனைக்கு ராஜபக்ச குடும்பத்தினரும் முழுமையாக ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜபக்ச குடும்பத்திற்கு தெரிந்தே, பொதுமக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் தப்பி ஓடிய கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் மக்களிடம் கொண்டு வர முடியாது என மஹிந்த ஆதரவு செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.அதன்படி, அவ்வாறான ஒருவரை மீண்டும் மேடைக்கு கொண்டு வருவது அரசியல் ரீதியாக பலனளிக்காது என்பது பொதுஜன பெரமுன கட்சியினரின் மதிப்பீடாக உள்ளது.

மஹிந்த ராஜபக்சவின் பெயர் மக்கள் மத்தியில் வலுவாக இருப்பதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக மஹிந்தவை முன்னிறுத்தி தமது அரசியல் நடவடிக்கைகளை தொடர இவர்கள் திட்டமிட்டுள்ளனர். அத்துடன்  நாமல் ராஜபக்சவின் அடுத்த தலைமையை எதிர்பார்க்கும் யோசனைக்கும் அவர்கள் இணங்கியுள்ளதாக தெரிய வருகிறது.

களுத்துறையில் ஆரம்பிக்கப்பட்ட கிராமம் கிராமமாக பிரச்சாரத்தை அதிகூடிய ஆற்றலுடன் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.கோட்டாபாயவை மேடைக்கு கொண்டுவர வேண்டாம் என ராஜபக்ச குடும்பத்திற்குள் இருந்து முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை அந்த குடும்பத்தின் உள்ளக முரண்பாட்டை வெளிப்படுத்துவதாகவே அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.