T20 உலகக் கோப்பை-இலங்கையை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா முதல் வெற்றியை பதிவு செய்தது.

டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதின. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுதை அடுத்து நேற்றைய போட்டியில் அவர் இடம்பெறவில்லை. நாணய சுழற்சயில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது . தொடக்க ஆட்டக்காரர் குசால் மெண்டிஸ் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் .

அடுத்து இறங்கிய தனஞ்செய டி சில்வா, நிசரங்காவுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 69 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் டி சில்வா 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் . பொறுப்புடன் ஆடிய நிசங்கா 40 ஓட்டங்களில் வெளியேறினார்.

பானுகா ராஜபக்ச 7 ஓட்டங்களிலும் , டாசன் ஷனகா 3 ஓட்டங்களிலும் , ஹசரங்கா ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்களை எடுத்தது. சரித் அசலங்கா 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதையடுத்து, 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர்- ஆரோன் பின்ச் களமிறங்கினர். ஒருமுனையில் ஆரோன் பின்ச் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த டேவிட் வார்னர் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு பின்ச் உடன் மிச்சேல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார்.

மார்ஷ் தனது பங்கிற்கு 17 பந்துகளில் 18 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தனஞ்ஜெயா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலிய அணி 8.3 ஓவர்களில் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை இழந்து இருந்தது. 3-வது விக்கெட்டுக்கு பின்ச்- மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தனர். ஆரோன் பின்ச் தொடர்ந்து நிதானத்தை கடைபிடிக்க அணியின் ஓட்ட கணக்கை உயர்த்துவதில் மேக்ஸ்வெல் ஈடுபட்டார்.

12 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 23 ஓட்டங்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஸ்டாய்னிஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிக்சர் மழை பொழிந்த ஸ்டாய்னிஸ், பின்ச் உடன் இணைந்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். ஸ்டாய்னிஸ் அதிரடியால் ஆஸ்திரேலிய அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 158 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது. ஸ்டாய்னிஸ் 18 பந்துகளில் 59 ஓட்டங்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இலங்கை அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது