பிரிட்டிஷ் வரலாற்றில் வெள்ளையர் அல்லாத சிறுபான்மை இனப் பிரதமர் பதவிக்கு!

Kumarathasan Karthigesu

தீபாவளி தினத்தன்று தெரிவானார் சுனாக்!

பிரிட்டிஷ் பழமைவாதிகளது தலைவராகவும் நாட்டின் அடுத்த பிரதமராகவும் 42 வயதான முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். பிரிட்டிஷ் வரலாற்றில் 1874 இல் பெஞ்சமின் டிஸ்ரேலி(Benjamin Disraeli) என்ற யூத இனத்தைச் சேர்ந்த பிரதமருக்குப் பின்னர் அங்கு பதவிக்கு வருகின்ற முதலாவது சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பிரதமர் ரிஷி சுனாக் என்று லண்டன் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அத்துடன் டவுணிங் வீதி அலுவலகம் செல்கின்ற வயதில் குறைந்த பிரதமர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைக்கிறது.

கட்சித் தலைவர் தெரிவுக்கான வேட்பாளர்களைத் தீர்மானிக்கின்ற கால அவகாசம் இன்று பிற்பகல் நிறைவடைந்த போது ரிஷி சுனாக் கட்சியின் தலைவராகப் போட்டி இன்றித் தெரிவாகும் வாய்ப்புக் கனிந்தது. அதன் மூலம் அவர் பிரதமராக நியமிக்கப்படவுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிடுவார் என நம்பப்பட்ட முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் ஏற்கனவே அதனைத் தவிர்த்துக் கொண்டார். மற்றொரு போட்டியாளரான முன்னாள் அமைச்சர் பென்னி மோர்டான்ட் அம்மையாரும் நூறு எம்பிக்களது ஆதரவைத் திரட்ட முடியாமற் போனதால் கடைசி நிமிடங்களில் போட்டியில் இருந்து ஒதுங்க நேர்ந்தது. இதனால் ரிஷி சுனாக் எதிர்ப்பின்றி முன்னேறிப் பதவிகளைத் தனதாக்கிக் கொண்டார்.

கட்சிக்குள் ஜோன்சனின் அணியைச் சேர்ந்தவர்கள் உட்பட இருநூறுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆதரவு அவருக்குக் கிடைத்திருக்கிறது. இளம் பிரதமராகப் பதவியேற்கவுள்ள ரிஷி சுனாக், பிரிட்டனில் குடியேறிய செல்வச் செழிப்பு மிக்க இந்திய வம்சாவளிக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். இந்துமதப் பின்னணியைச் சேர்ந்தவர். அவ்வாறான ஒருவர் பிரதமராகத் தெரிவாகியிருப்பது-அதுவும் இந்துக்களது முக்கிய பண்டிகையான தீபாவளித் திருநாளில் அது நிகழந்திருப்பது – ஆசிய நாடுகளில் மிகுந்த முக்கியத்துவம் மிக்க செய்தியாக இடம்பிடித்துள்ளது.

பதவி விலகிய பிரதமர் லிஸ் ட்ரஸ் அம்மையார் மாளிகை சென்று அரசர் சார்ள்ஸைச் சந்தித்து தனது விலகலை முறைப்படி அறிவிப்பார். அதன் பிறகு அரசர் சார்ள்ஸ் ரிஷி சுனாக்கை அழைத்துப் புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு கோருவார் என்று அறிவிக்கப்படுகிறது. மகாராணியின் மறைவை அடுத்து சார்ள்ஸ் மன்னராகப் பதவியேற்ற பிறகு அவரால் நாட்டின் பிரதமராக அறிவிக்கப்படுகின்ற முதலாவது தலைவர் ரிஷி சுனாக் ஆகிறார்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய ரிஷி சுனாக், 2015 இல் Yorkshire தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். முதலாவது அமைச்சுப் பதவி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தான் அவருக்குக் கிடைத்திருந்தது. மிக முக்கிய அமைச்சான நிதி அமைச்சுப் பொறுப்பைத் தனது 39 ஆவது வயதில் ஏற்றுக் கொண்ட ரிஷி, தனது 42 ஆவது வயதில் நாட்டின் பிரதமர் ஆகின்றார்.

இதன் மூலம் நவீன அரசியல் வரலாற்றில் மிகக் குறைந்த காலம் அரசியலில் ஈடுபட்ட பிரதமர் என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார்.

இந்தியாவில் ஆறாவது இடத்தில் உள்ள தொழில்நுட்பத்துறைச் செல்வந்தர் என். ஆர் நாராயணமூர்த்தியின் (NR Narayana Murthy) மகளாகிய அக் ஷதா மூர்த்தியை (Akshata Murty) 2009 இல் மணம் புரிந்த ரிஷிக்கு, கிருஷ்ணா (Krishna) மற்றும் அனொஷ்க்கா (Anoushka) என்ற இரு புதல்விகள் உள்ளனர். ரிஷி சுனாக் இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட், கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் ஆகிய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளை முடித்தவர்.

இந்தியாவில் பல பில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான சொத்துக்கள் அவரது மனைவி பெயரில் உள்ளன. பெரும் கோடீஸ்வரச் செல்வந்தரது வாரிசான மகளை மணம் முடித்த காரணத்தால் வரி தொடர்பான சர்ச்சைகள் ரிஷியின் அரசியல் வாழ்வில் அடிக்கடிப் பின்னடைவுகளை ஏற்படுத்திவந்தன.

ரிஷி சுனாக்கை பிரிட்டிஷ் வரலாற்றில் பிரதமர் பதவிக்கு வந்திருக்கின்ற “மிகப் பெரிய செல்வந்தர்” என்று மேற்குலக ஊடகங்கள் சில வர்ணித்துள்ளன.