முன்னாள் பிரதமர் மகிந்தவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்ட 15 பேரும் பிணையில் விடுதலை !

பொதுஜன பெரமுனவின் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாவலப்பிட்டி நகரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்றிரவு நாவலப்பிட்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை இந்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் டிசம்பர் 13ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்று முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் நாவலப்பிட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு தொகுதியினர் நேற்றைய தினம் நாவலப்பிட்டி நகரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர்.

போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் பல்வேறு கோரிக்கைகளை விடுத்த போதிலும், அதனையும் பொருட்படுத்தாது போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் இந்த சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.