ரஷ்யப் படைகள் பெலாரஸ் வருகை! புதிய அணி திரள்வு.

Kumarathasan Karthigesu

81

ரஷ்யப் படையின் முதலாவது வாகன அணி ரயில்கள் மூலம் பெலாரஸ் நாட்டை வந்தடைந்துள்ளது என்று அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

எல்லைகளில் உருவாகியுள்ள அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் என்று அது மேலும் தெரிவித்துள்ளது.

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடாகிய பெலாரஸ், ஒரு புறம் அதன் நெருங்கிய கூட்டாளியான ரஷ்யாவுடன் எல்லையைக் கொண்டுள்ளது. மறுபுறம் உக்ரைன், போலந்து, லத்வியா, லித்துவேனியா போன்ற நேட்டோ சார்பு நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்புத் தொடங்கியது முதல் இந்த எல்லைப் பகுதிகளில் பதற்ற நிலை காணப்படுகிறது.

உக்ரைன் போரில் ரஷ்யாவை ஆதரித்துவருகின்ற பெலாரஸ் நாடு மொஸ்கோவுடன் மேலும் ஓர் அடி நெருங்கிச் செயற்பட விரும்புகிறது என்று அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ (Alexander Lukashenko) கடந்த திங்களன்று தெரிவித்திருந்தார்.

போலந்து, லித்துவேனியா, உக்ரைன் போன்ற நாடுகளால் பயிற்சியளிக்கப்பட்ட கிளர்ச்சியாளர்களால் பெலாரஸ் நேரடியான அச்சுறுத்தல்களைச் சந்தித்துள்ளது என்றும் அதேசமயம் உக்ரைன் பெலாரஸின் தெற்கு எல்லைக்குள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளது எனவும் கூறி அவர் நாட்டுக்குள் ரஷ்யப்படைகள் வரவழைக்கப்படுவதை நியாயப்படுத்தியிருந்தார்.

அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ போரின் ஆரம்பத்தில் ரஷ்யா தனது நாட்டைப் பயன்படுத்தி உக்ரைன் மீது தாக்குதல் நடத்த அனுமதித்திருந்தார். ஆனால் அவரது படைகள் இன்றுவரை போரில் நேரடியாகச் சம்பந்தப்படவில்லை. ஆனால் இப்போது இரு நாட்டுப் படைகளும் புதிய பாதுகாப்புக் கூட்டு என்ற பெயரில் ஓரணியில் திரள்வது பெலாரஸ் படைகள் போரில் நேரடியாகக் களமிறங்கக் கூடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் மீது பெரிய தாக்குதல் எதனையும் நடத்தும் வாய்ப்பு உடனடியாக இல்லை என்று தெரிவித்திருக்கிறார். கஸகிஸ்தான் நாட்டில் செய்தியாளர்களது கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், உக்ரைன் மீதான தனது படையெடுப்பைச் “சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு” என்று மீண்டும் நியாயப்படுத்தினார்.

போரின் நோக்கம் உக்ரைன் நாட்டை அழித்து நிர்மூலமாக்குவது அல்ல என்றும் அவர் கூறினார்.

கிறீமியா பாலம் மீது நடத்தப்பட்ட பெரும் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து மொஸ்கோ அதற்குப் பதிலடியாக உக்ரைனின் தலைநகர் உட்பட முக்கிய நகரங்களின் உட்கட்டுமானங்கள் மீது குண்டுகளைப் பொழிந்து தாக்கியிருந்தது.

அது போன்ற தாக்குதல்கள் மேலும் தொடருமா என்ற அச்சத்தின் மத்தியில் புடின் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

நேட்டோ படைகளுடன் ஏற்படக்கூடிய நேரடியான மோதல் உலகளாவிய பேரழிவை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை செய்த புடின், “அத்தகைய பேரழிவுகள் பற்றிப் பேசுகின்ற புத்திசாலிகள், அவ்வாறான முடிவுக்குச் செல்லாதிருக்கட்டும்” – என்று கூறி மேற்கு நாடுகளை மறைமுகமாகச் சாடினார்.