இறைவரித்திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் 100,000 ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுவோருக்கும் வருமான வரி!

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித்திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம் மாதாந்தம் குறைந்தபட்சம் 100,000 ரூபாவுக்கு மேற்பட்ட வருமானம் பெறுவோர் கூட வருமான வரியைச் செலுத்தவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதுடன், இதன்விளைவாக 20 சதவீதமான வரிவருமானத்தை நாட்டுக்கு ஈட்டித்தரும் தனிநபர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடக்கூடிய சாத்தியப்பாடு உயர்வடைந்துள்ளது.

2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான உள்நாட்டு இறைவரித்திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டதைத் தொடர்ந்து அச்சட்டமூலம் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது.

அச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் மாதாந்தம் குறைந்தபட்சம் 100,000 ரூபாவுக்கு மேற்பட்ட வருமானம் பெறும் அனைவரும் வருமான வரியைச் செலுத்தவேண்டிய நிலையேற்படும். ஏற்கனவே நடைமுறையில் இருந்த வருமான வரி அறவிடத்தகுந்த குறைந்தபட்ச வருடாந்த வருமானமான 3 மில்லியன் ரூபா இத்திருத்தச்சட்டமூதத்தின் பிரகாரம் 1.2 மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

எனவே முன்னர் மாதாந்தம் குறைந்தபட்சம் 250,000 ரூபாவை வருமானமாகப் பெறுவோரிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட வருமான வரி அறவீடு, இச்சட்டமூலம் நிறைவேறும் பட்சத்தில் மாதாந்தம் குறைந்தபட்சம் 100,000 ரூபாவை வருமானமாகப் பெறுவோரிலிருந்து ஆரம்பமாகும். புதிய திருத்தத்தின்படி கம்பனிகள், தனிநபர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரதும் வருடாந்த வருமானத்தை அடிப்படையாகக்கொண்டு 6%, 12%, 18%, 24%, 30%, 36% என்ற ரீதியில் இவ்வருமான வரி அறவிடப்படும்.

எனவே இப்புதிய திருத்தங்களின் பிரகாரம் பொருளியல் நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகளின்படி (உத்தியோகபூர்வமற்ற) மாதாந்தம் 141,667 ரூபா மற்றும் அதற்கு மேற்பட்ட வருமானம் பெறுவோர் (வருடாந்த வருமானம் 1,700,000 ரூபா) மாதாந்தம் 2,500 ரூபாவையும், மாதாந்தம் 183,333 ரூபா மற்றும் அதற்கு மேற்பட்ட வருமானம் பெறுவோர் (வருடாந்த வருமானம் 2,200,000 ரூபா) மாதாந்தம் 7,500 ரூபாவையும், மாதாந்தம் 225,000 ரூபா மற்றும் அதற்கு மேற்பட்ட வருமானம் பெறுவோர் (வருடாந்த வருமானம் 2,700,000 ரூபா) மாதாந்தம் 15,000 ரூபாவையும், மாதாந்தம் 266,667 ரூபா மற்றும் அதற்கு மேற்பட்ட வருமானம் பெறுவோர் (வருடாந்த வருமானம் 3,200,000 ரூபா) மாதாந்தம் 25,000 ரூபாவையும், மாதாந்தம் 308,333 ரூபா மற்றும் அதற்கு மேற்பட்ட வருமானம் பெறுவோர் (வருடாந்த வருமானம் 3,700,000) மாதாந்தம் 37,500 ரூபாவையும், மாதாந்தம் 350,000 ரூபா மற்றும் அதற்கு மேற்பட்ட வருமானம் பெறுவோர் (வருடாந்த வருமானம் 4,200,000 ரூபா) மாதாந்தம் 52,500 ரூபாவையும் வருமான வரியாகச் செலுத்தநேரிடும்.

இருப்பினும் இதுவரையான காலமும் நடைமுறையில் இருந்த உள்நாட்டு இறைவரி சட்டத்தின்படி 141,667 ரூபா, 183,333 ரூபா, 225,000 ரூபாவை மாதாந்த வருமானமாகப் பெற்றவர்கள் வருமான வரியைச் செலுத்தவேண்டிய தேவையிருக்கவில்லை என்பதுடன் 266,667 ரூபா மாதாந்த வருமானம் பெறுவோர் 1000 ரூபாவையும், 308,333 மாதாந்த வருமானம் பெறுவோர் 3,500 ரூபாவையும், 350,000 ரூபா மாதாந்த வருமானம் பெறுவோர் 6000 ரூபாவையுமே மாதாந்த வருமான வரியாகச் செலுத்தவேண்டியிருந்தது.

எனவே ஏற்கனவே நடைமுறையிலுள்ள வருமான வரி அறவீட்டு முறைமையுடன் ஒப்பிடுகையில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் உயர்வருமானம் பெறுவோர் மத்தியில் மாத்திரமன்றி வைத்தியர்கள், சட்டத்தரணிகள், சுயதொழில் முயற்சியாளர்கள், வணிகர்கள் நடுத்தர வருமானம் பெறுவோர் உள்ளடங்கலாக நாட்டின் பெரும்பாலான தரப்பினர்மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளியல் நிபுணர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை தற்போது பணவீக்க அதிகரிப்பின் விளைவாக மக்களின் நாளாந்த வாழ்க்கைச்செலவு வெகுவாக உயர்வடைந்துள்ள நிலையில், வருமான வரி அறவிடத்தகுந்த குறைந்தபட்ச வருடாந்த வருமானத்தை 3 மில்லியன் ரூபாவை விட அதிகரிக்கவேண்டுமே தவிர, அதனை 1.2 மில்லியன் ரூபாவாகக் குறைக்கக்கூடாது என்ற வாதம் முன்வைக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய இலங்கை உள்நாட்டு இறைவரித்திணைக்கள அதிகாரியொருவர், இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாகவே இவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு இத்திருத்தங்கள் இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வருமென சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அச்சட்டமூலம் இன்னமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. எனவே இச்சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ள திருத்தங்களுக்கு அமைவாக இம்மாத இறுதியில் கழிப்பனவுகள் மேற்கொள்ளப்படவேண்டுமா? எனப் பல்வேறு கம்பனிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள கேள்விகளுக்குத் தம்மால் பதிலளிக்கமுடியாத சூழ்நிலை காணப்படுவதாகத் தெரிவித்த அவ்வதிகாரி, இச்சட்டமூலம் சாதாரண மக்களையும் பாதிக்கக்கூடும் என்பதால் பாராளுமன்றக் குழுநிலையின்போது இதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியப்பாடு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் வருமான வரி அறவீட்டைப் பொறுத்தமட்டில் 72 சதவீதமான வருமானம் சுமார் 512 கம்பனிகளிடமிருந்தும் 3 – 5 சதவீதமான வருமானம் தனிநபர்களிடமிருந்தும் 20 சதவீதமான வருமானம் சிறிய மற்றும் நடுத்தரளவு வணிகங்களிடமிருந்தும் கிடைக்கப்பெறுகின்றன.

ஆகவே உள்நாட்டு இறைவரித்திணைக்கள அதிகாரியின் கருத்துப்படி தற்போதைய திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படின், 20 சதவீதமான வரிவருமானத்தை நாட்டுக்கு ஈட்டித்தரும் தனிநபர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடக்கூடிய சாத்தியப்பாடு உயர்வாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.