‘மக்கள் எழுச்சிப் போராட்டத்தை தடுக்க முடியாது’

அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீதான அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான அடக்குமுறைகள் தொடரும் பட்சத்தில் மற்றுமொரு மக்கள் எழுச்சிப் போராட்டத்தை தடுக்க முடியாது என கோட்டா கோ கம போராட்டத்தின் முன்னின்று செயற்பட்ட சட்டத்தரணி  ஒருவர் எச்சரித்துள்ளார்.

மக்களின் சுதந்திர உரிமைகள் மீது கை வைக்காதே ‘ என்ற தொனிப் பொருளில் கொழும்பு காலிமுகத்திடலில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இதில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சட்டத்தரணி நுவன் போபகேஇ ஆர்ப்பாட்டங்களை அடக்குமுறை ஊடாக அடக்க முயல்வதை விடுத்து பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதன் ஊடாக போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவருமாறு அரசாங்கத்தை கோரியுள்ளார்.

கொழும்பு காலி முகத்திடலில் நேற்று இடம்பெற்ற அமைதி ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, சட்டத்தரணிகள் மற்றும் தொழில் நிபுணர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.