ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து- 8-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி பெற்றது.

ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டோர்) பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி 2008-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் உள்ள புவனேஷ்வர், கோவா, நவிமும்பை ஆகிய நகரங்களில் இன்று முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்த கால்பந்து விழாவில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.

இந்திய பெண்கள் அணி ஜூனியர் உலக கோப்பை தொடரில் கால்பதிப்பது இதுவே முதல் முறையாகும். அதாவது இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் இந்த போட்டியில், போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடக்க நாளான இன்று 4 லீக் ஆட்டங்கள் நடக்கிறது.

இதில் புவனேஷ்வரில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த அமெரிக்காவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் கோல் மழை பொழிந்த அமெரிக்கா 8-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அமெரிக்காவின் சார்பாக மெலினா ரெபிம்பாஸ் பிரேஸ் (9வது மற்றும் 31வது நிமிடம்), சார்லோட் கோஹ்லர் (15வது), ஒன்யேகா கேமெரோ (23வது), கிசெல் தாம்சன் (39வது), எலா எம்ரி (51வது), டெய்லர் சுவாரஸ் (59வது), கேப்டன் மியா பூட்டா (62வது) ஆகியோர் கோல் அடித்தனர். இந்திய அணி வீராங்கனைகள் எவ்வளவு போராடியும் இறுதிவரை அவர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் அமெரிக்கா 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.