ஜேர்மனியில் ரயில்களை முடக்கிய நாசவேலையின் பின்னணியில் வெளிநாட்டுச் சக்தி?

Kumarathasan Karthigesu

ஜேர்மனியின் தேசிய ரயில் சேவைகளில்(Deutsche Bahn) ஒரு பகுதி சனிக்கிழமை காலை சில மணி நேரம் முடங்கியது. அது ஒரு திட்டமிட்ட நாச வேலை என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

நாட்டின் வட பகுதியில் அயல் நாடுகளுக்கும் தூர இடங்களுக்கும் செல்கின்ற ரயில்கள் உட்படப் பல சேவைகள் திடீரெனக் காலையில் மூன்று மணி நேரம் செயலிழந்ததால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் அந்தரிக்க நேர்ந்தது. ரயில் சேவைகள் சீராகத் தொழிற்பட உதவும் முக்கியமான டிஜிட்டல் தொலைத் தொடர்புக் கேபிள்கள் இரண்டு வெவ்வேறு இடங்களில் வெட்டப்பட்டதை அடுத்தே சேவைகள் திடீரென முடங்கிப் போயின. கிழக்கில் பேர்ளின் பகுதியிலும் அங்கிருந்து பல நூற்றுக் கணக்கான மைல்கள் தொலைவில்  மேற்கு மாநிலத்தில் ஹேர்ன்(Herne)  என்ற இடத்திலும் கேபிள்களை வெட்டி நாச வேலை புரியப்பட்டுள்ளது.

விசாரணையாளர்கள் இந்தச் செயலில் அரசியல் நோக்கம் இருக்கலாம் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் பயங்கரவாதம் மற்றும் வெளிநாட்டுத் தலையீடுகளுக்கான சான்றுகள் இல்லை என்றும் கூறியிருக்கின்றனர். ஆனால் ஜேர்மனியின் சமஷ்டிப் பொலீஸின் உள்ளக அறிக்கை ஒன்றில் இருந்து கசிந்த தகவல்கள் இந்த நாச வேலையில் வெளிநாடு ஒன்றின் தலையீடு இருப்பதை மறுப்பதற்கில்லை என்று தெரிவித்திருப்பதாக ‘பில்ட்’ (Bild) செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் பால்டிக் கடலின் ஆழத்தில் நோட் ஸ்ட்ரீம் எரிவாயுக் குழாய்கள் மீது நடத்தப்பட்ட மர்ம வெடிகுண்டுத் தாக்குதலை அடுத்து  ஜேர்மனி அதன் முக்கிய உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் அண்மையில் புதிதாக நிறுவப்பட்ட நாட்டின் ஆள்புலக் கட்டளை மையத்துக்குப்( territorial command) பொறுப்பான தளபதி ஜெனரல் கார்ஸ்டன் ப்ரூயர்(Carsten Breuer), ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் நோட் ஸ்ட்ரீம் போன்ற நாச வேலைகள் ஜேர்மனியின் ரயில்வே போன்ற உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்படலாம் என்று எச்சரித்திருந்தார். சைபர் தாக்குதல்கள் மற்றும் நாச வேலைகள் உட்பட ஒரு கலப்புத் தாக்குதல் அச்சுறுத்தல் (hybrid threat) குறித்து அவர் அதில் பிரஸ்தாபித்திருந்தார்.

ரயில் தொலைத் தொடர்புக் கேபிள்கள் வெட்டப்பட்ட இரண்டு இடங்களுக்கும் இடையிலான பூகோளத் தொலைவு (geographical distance) மற்றும் அண்மையில் நடந்த நோட் ஸ்ட்ரீம் குழாய்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றின் கணிப்பில் இந்த நாச வேலைக்குப் பின்னால் வெளிநாடு ஒன்று இருக்கக் கூடும் என்று அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்கின்ற குற்றப் புலனாய்வுப் பொலீஸ் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜேர்மனியில் இதற்கு முன்னர் இது போன்ற சிறிய நாச வேலைகள் தீவிர இடதுசாரி குழுக்களால் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த முறை ரயில்வே வலைப் பின்னலைச் ஸ்தம்பிக்கச் செய்த இந்த முயற்சி அவற்றில் இருந்து வேறுபடுகிறது.

இது போன்ற செயல்களைப் புரிவதற்கு ரயில்வேயின் டிஜிட்டல் வானொலி அமைப்புப் பற்றிய மிகத் துல்லியமான அறிவு அவசியம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.