நாம் பயன்படுத்தும் சொற்கள் மிகவும் முக்கியமானவை ‘ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்’ பொதுக்குழுவில்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

சென்னையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவின் 15வது பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக் கப்பட்ட ஒன்றிய, நகர, நகரிய , பேரூர், பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதில், திமுகவின் தலைவராக 2-வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து மேடையில் பேசிய அவர், இந்த வாய்ப்பை வழங்கியவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், என்றும் உங்களுக்கு உண்மையாக இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்தபோது செயலாற்றிவர்கள் தற்போதும் தொடரட்டும் என்றே முடிவெடுத்திருக்கிறோம், இறக்கத்தால் மட்டுமே சிலருக்கு பொறுப்புகள் நீட்டித்து இருக்கலாம். வாய்ப்பு பெற முடியாதவர்கள் வருந்த வேண்டாம் வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்படவில்லை, அவர்கள் மறக்கப்படவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், மழை பெய்யவில்லை என்றாலும், மழை அதிகம் பெய்தாலும் என்னைதான் குறை சொல்வார்கள். வெவ்வேறு பக்கங்களில் இருந்து வரக்கூடிய பல்முனை தாக்குதலுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன். ஒரு பக்கம் திமுக தலைவர், ஒரு பக்கம் முதல்வர், இத்தகை சுழலில் இருக்கும் என்னை மேலும் துன்பப்படுத்தும் வகையில் உறுப்பினர்களோ, மூத்த நிர்வாகிகளோ, அமைச்சர்களோ நடந்து கொண்டால் என்ன சொல்வது?, எந்த பொறுப்பாக இருந்தாலும் அதனை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள்என்பதை பொறுத்து தான் அந்த பொறுப்பு நிலைத்து நிற்கும் என்பதை கவனமாக வைத்து கொள்ளுங்கள் என எச்சரித்துள்ளார்.

நாள்தோறும் நம்மவர்கள் யாரும் பிரச்சனையை உருவாக்கியிருக்க கூடாது என்று தான் கண்விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னை தூங்க விடாமல் கூட ஆக்குகிறது. என் உடம்பை பார்த்தாலே உங்களுக்கு தெரியும் என வேதனையாக பேசினார். மேலும்,  நாம் பயன்படுத்த வேண்டிய சொற்கள் மிக மிக முக்கியமானவை, ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்; இதனால் அடுத்தவர்களிடம் பேசும் போது மிக மிக எச்சரிகையாக பேசுங்கள் என கேட்டுக்கொண்டார்.

அனைவரும் கழகத்தை முன்னோக்கி இழுத்து செல்ல வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டிய காலம் இது. சட்டமன்ற தேர்தலில் வென்று விட்டோம், ஆட்சி பொறுப்பிற்கு வந்துவிட்டோம் என மெத்தனமாக இருக்க முடியாது. பெற்ற வெற்றியை நிரந்தரமாக தக்க வைக்க வேண்டும். இனி தமிழகத்தை திமுக தான் ஆளப்போகிறது என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை. நம்மை விட நாட்டு மக்கள் அதில் உறுதியாக இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

சாதனைகளை சொல்ல எதுவும் இல்லாத காரணத்தால் நம்மை பற்றி அவதூறு மூலமாக அரசியல் நடத்த பார்க்கிறது பாஜக. அரசியலையும் ஆன்மிகத்தையும் எப்போது இணைக்காத மக்கள் தமிழக மக்கள் என்பதால் திணறி கொண்டு இருக்கிறது பாஜக என தெரிவித்துள்ளார்.