இலங்கை அரசாங்கம் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணைக்கு ஒத்துழைக்காமல் இருக்கின்றவரைக்கும் பொருளாதார சிக்கலில் இருந்து மீள முடியாது.

எம். ஏ. சுமந்திரன்

82

ஜெனிவா மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்த நாட்டையும் கட்டுப்படுத்தாது.  கட்டுப்படுத்தாத தீர்மானங்களைத்தான் இந்த  பேரவைக்கு நிறைவேற்ற முடியும்.

அதனால் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் மூலம் எமது மக்களது பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வைக்கொடுக்காது.

என்றாலும் இந்த பிரேரணை இலங்கைக்கு மிகவும் சவால் மிக்கதானதாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணை மூலம் செய்யக்கூடியது என்ன என்பது தொடர்பாக தமிழ் மக்களுக்கு தெரியும்.

ஏனெனில் மனித உரிமை பேரவையில் 10வருடங்களாக இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றது. அதனால் இந்த பிரேரணை ஊடாக செய்ய முடியாததை தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதில்லை.

என்றாலும் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணை மூலம் இலங்கையை சர்வதேச கண்காணிப்புக்குள் வைத்திருக்கும் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

அது தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது. அதேநேரம் மனித உரிமை பேரவைக்கு இருக்கும் அதிகாரங்களை வைத்துப்பார்ப்போமானால் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் முன்னேற்றகரமான தீர்மானம் என கருதலாம். ஆனால் அது எமது மக்களது பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வைக்கொடுக்காது.

அத்துடன் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலம் தாங்கள் எதிர்பார்த்த தீர்வுகள் இதன் மூலம் கிடைக்கவில்லை எனவும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும் ஒருசிலர் தெரிவித்திருப்பதாக அறியக்கிடைத்தது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினுடைய அதிகார வரம்பு என்ன என்பதை தெரியாதவர்கள்தான் இவ்வாறு கதைக்கின்றனர். இந்த பேரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்த நாட்டையும் கட்டுப்படுத்தாது. கட்டுப்படுத்தாத தீர்மானங்களைத்தான் இந்த பேரவைக்கு நிறைவேற்ற முடியும். அதனால் பெரியளவில் இந்த பிரேரணை மூலம் எதிர்பார்க்க முடியாது.

அத்துடன் இந்த பேரவையின் மூலம் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்திருந்தால், அது மக்களின் தவறு அல்ல. அரசியல்வாதிகள்தான் இவ்வாறான தவறான எதிர்பார்ப்பை கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் இந்த பிரேரணையால் எதனை செய்ய முடியும் என்பது கடந்த 10வருடங்களாக இதனை பார்த்துவரும் மக்களுக்கு தெரிந்திருக்கும். அந்த நோக்கில் பார்க்கின்றபோது இந்த தீர்மானம் மிகவும் முன்னேற்றகரமான தீர்மானமாகவே காண்கின்றேன்.

அத்துடன்  இந்த பிரேரணை இலங்கைக்கு மிகவும் சவால் மிக்கதானதாகும். ஏனெனில் மனித உரிமை பேரவையின் பிரேரணை எந்த ஒரு நாட்டையும் கட்டுப்படுத்த முடியாது என்றாலும். நாட்டை கட்டியெழுப்புவதாக இருந்தால், இந்த பிரேரணைக்கு ஆதரவளித்த மற்றும்  நடுநிலையாக இருந்த நாடுகளின் உதவி இலங்கைக்கு மிக முக்கியமானதாகும். அதனால் இலங்கை அரசாங்கம் இந்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் தீர்மானங்களுக்கு ஒத்துழைக்காமல் இருக்கின்றவரைக்கும் பொருளாதார சிக்கலில் இருந்து மீள எழுவதுகூட கஷ்டமானதாகவே இருக்கும் என்றார்.