சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு!

எரிபொருளை இறக்குமதி செய்ய அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் மூடப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் (CPC) போதுமான அளவு இருப்புக்கள் இருப்பதாலும், சுத்திகரிக்கப்பட்ட பொருட்களுக்கான வாராந்திர  அந்நிய செலாவணி தேவைகளை இலங்கை மத்திய வங்கி (CBSL) வழங்கியுள்ளதாலும், சுத்திகரிக்கப்பட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு இருக்காது என்றார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு போதுமான அந்நிய செலாவணி கிடைத்தவுடன், கடந்த 10 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் உள்ள 100,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் இறக்கப்படும் என்று அவர் மேலும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.