4வது டி-20 போட்டி: 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி திரில் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிராக கராச்சி தேசிய விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (25) இரவு கடைசி ஓவர்வரை பரபரப்பை ஏற்படுததிய 4ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 19ஆவது ஓவரில் ஹரிஸ் ரவூப் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்திய 2 விக்கெட்களின் பலனாக பாகிஸ்தான் 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இப் போட்டி பாகிஸ்தானின் 200ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியாக அமைந்ததுடன் 200 போட்டிகளைப் பூர்த்தி செய்த முதலாவது அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டது

இந்தப் போட்டி முடிவை அடுத்து 2 அணிகளும் தலா 2 வெற்றிகளுடன் சமநிலையில் இருக்கின்றன. 7 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் எஞ்சிய 3 போட்டிகள் லாகூரில் செப்டெம்பர் 28, 30, அக்டோபர் 2ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

மொஹமத் ரிஸ்வான் குவித்த அரைச் சதம், ஹாரிஸ் ரவூப், மொஹமத் நவாஸ் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு என்பன பாகிஸ்தானின் வெற்றிக்கு வழிவகுத்தன.

கராச்சியில் நடைபெற்ற 4ஆவது போட்டியில் பாகிஸ்தானினால் நிர்ணியிக்கப்பட்ட 167 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து 3ஆவது போட்டியில் 221 ஓட்டங்களைக் குவித்து 63 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்ததால் 4ஆவது போட்டியில் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஹாரிஸ் ரவூப், மொஹமத் நவாஸ் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்தை தோல்வி அடையச் செய்தனர்.

குறிப்பாக முதல் 3 ஓவர்களில் வீழ்த்தப்பட்ட 3 விக்கெட்களும் 19ஆவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தப்பட்ட விக்கெட்களும் பாகிஸ்தானுக்கு திருப்பு முனைகளாக அமைந்தன.

முன்வரிசை வீரர்களான பில் சோல்ட் (8), அலெக்ஸ் ஹேல்ஸ் (5) வில் ஜெக்ஸ் (0) ஆகிய மூவரும் முதல் 2 ஓவர்களில் ஆட்டமிழக்க மொத்த எண்ணிக்கை வெறும் 14 ஓட்டங்களாக இருந்ததுடன் இங்கிலாந்து பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.

எனினும் மத்திய வரிசை வீரர்கள் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி போட்டித்தன்மையை அதிகரிக்கச் செய்தனர்.

பென் டக்கெட் (33), ஹெரி ப்றூக் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். தொடர்ந்து ஹெரி ப்றூக்குடன் இணைந்த அணித் தலைவர் மொயீன் அலி 4ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்தார். ஆனால் இருவரும் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர். (113 – 6 விக்.).

ப்றூக் 34 ஓட்டங்களையும் மொயீன் அலி 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

மொத்த எண்ணிக்கை 130 ஓட்டங்களாக இருந்தபோது டேவிட் வில்லி 11 ஓட்டஙகளுடன் 7ஆவதாக ஆட்டமிழந்தார்.

எனினும் லியாம் டோசன் 34 ஓட்டங்களைப் பெற்று 19ஆவது ஓவரில் இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கையை 162 ஓட்டங்களாக உயர்த்தினார். வெற்றிக்கு மேலும் 4 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 19ஆவது ஓவரில் ஹாரிஸ் ரவூப் வீசிய 3ஆவது பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்த லியாம் டோசன் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் அறிமுக வீரர் ஒலி ஸ்டோனின் விக்கெட்டை ரவூப் நேரடியாகப் பதம் பார்த்தார். (162 – 9 விக்.)

கடைசி ஓவரில் ரீஸ் டொப்லே ரன் அவுட் ஆனதும் இங்கிலாந்து தோல்வியைத் தழுவியது.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹாரிஸ் ரவூப் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் நவாஸ் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் ஹஸ்நய்ன் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது.

இந்த மொத்த எண்ணிக்கையில் அரைவாசிக்கும் மேற்பட்ட ஓட்டங்களை மொஹமத் ரிஸ்வான் பெற்றார்.

67 பந்துகளை எதிர்கொண்ட ரிஸ்வான் 9 பவுண்டறிகள், ஒரு சிச்ஸுடன் 88 ஓட்டங்களைக் குவித்தார். அவர் ஆரம்ப விக்கெட்டில் அணித் தலைவர் பாபர அஸாமும் 97 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

இந்த வருடம் தனது 11ஆவது சர்வதேச இருபது 20 கிரக்கெட் போட்டியில் விளையாடிய ரிஸ்வான் 6ஆவது அரைச் சதத்தைக் குவித்தார். அத்துடன் 55 இன்னிங்ஸ்களில் அவர் பெற்ற 19 அரைச் சதம் இதுவாகும்.

பாபர் அஸாம் 36 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரை விட ஷான் மசூத் 21 ஓட்டஙகளையும் ஆசிவ் அலி ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் ரீஸ் டொப்லே 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.