திரிபோஷாவில் நச்சுத் தன்மை?

கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா சத்துணவில் நச்சுத்தன்மையுடைய அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக தெரிவித்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

திரிபோஷா உற்பத்தி நடவடிக்கையின்போது, அஃப்ளொடோக்சின் அடங்கிய சோளம் அகற்றப்படும் என்றும் எனவே, குறித்த குற்றச்சாட்டை தாம் நிராகரிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

திரிபோஷா தொழிற்சாலையை நவீனமயப்படுத்துவதற்கு இரண்டு மில்லியன் டொலர்களை சுகாதார அமைச்சுக்கு வழங்குவதற்கு தனியார் துறை உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா சத்துணவில் அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார்.

இதனையடுத்து, இந்த கருத்து தொடர்பாக சுகாதார அமைச்சு விசாரணை நடத்த வேண்டும் என அரச குடும்ப நல சுகாதார சேவையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.

அத்தோடு, நாடு முழுவதிலும் உள்ள பல குடும்ப நலப் பணியாளர்களிடமும் இது தொடர்பில் வினவியதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் திரிபோஷாவை வழங்க வேண்டாம் என எந்தவொரு தரப்பினரும் தமது அதிகாரிகளிடம் கோரவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் புற்றுநோய்க் காரணியான அஃப்லடொக்சின் கொண்ட திரிபோஷ சில மாதங்களுக்கு முன்னர்  இனங்காணப்பட்டதாகவும், ஆனால் உடனடியாக அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

களுத்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தை அண்டிய பகுதிகளில் இந்த புற்றுநோய் காரணிகள் அடங்கிய திரிபோஷ மீட்கப்பட்டதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்