கோஹினூர் வைரத்தை திருப்பிக் கேட்கும் இந்தியர்கள்!.மகாராணி மறைவை அடுத்து புதிதாய் கோரிக்கை வலுப்பு .

Kumarathasan Karthigesu

உலகப் புகழ் வாய்ந்த கோஹினூர் வைரத்தை அரச குடும்பத்தினர் மீண்டும் இந்தியாவிடம் திருப்பித் தரவேண்டிய வேளை இதுவா?

கடந்த 8 ஆம் திகதி பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்தின் மறைவு அறிவிக்கப்பட்ட கையோடு இந்தக் கேள்வி ருவீற்றர் உட்பட சமூக இணைய ஊடகங்களில் வலுப்பெற்றது. அது தொடர்பான கருத்துக்களும் வாதப் பிரதிவாதங்களும் நீடிக்கின்றன.

உலகின் மிகப்பெரிய – 105 கரட்(carat) – — பட்டை தீட்டிய வைரம் என்று புகழப்படுகின்ற கோஹினூர்(Koh-i-Noor) வைரம் வரலாற்று ரீதியாக யாருக்குச் சொந்தம் என்பதில் குழப்பங்கள் உள்ள போதிலும் இந்தியா அதனைத் தன்னுடையது என்று உரிமை கொண்டாடுகிறது. பாகிஸ்தானும் அதனை உரிமை கோரியிருந்தது.

கோஹினூர் வைரம் பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் கையில் கிடைப்பதற்கு முன்பாக ராஜ்புட், முஹலாய மன்னர்கள், ஈரானியப் போர்ச் சக்ரவர்த்திகள், ஆப்கானிய மன்னர்கள், பஞ்சாப் மகாராஜாக்கள் போன்றவர்களின் கைகளில் மாறி மாறிச் சிக்கி இருந்தது என்பதைக் குறிக்கும் வரலாற்றுத் தகவல்கள் பல உள்ளன.

பிரித்தானிய அரச குடும்பத்தின் அரண்மனை இணையத் தளங்களில் காணப்படுகின்ற தகவல்களின்படி 1849 இல் அது அரச குடும்பத்தினரிடம் கையளிக்கப்படுவதற்கு முன்னர் இந்தியாவின் தெற்கு மத்திய மாநிலத்தில் உள்ள கோல்கொண்டா சுரங்கங்களில் (Golconda mines) இருந்து தோண்டி எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் அரசியல் ரீதியிலும் சட்ட ரீதியிலும் பெரும் சர்ச்சைகளின் மையத்தில் உள்ள இந்த அதிசய வைரக் கல், இங்கிலாந்துடனான டில்லியின் உறவில் என்றைக்கும் ஒரு நெருடலாக இருந்துவருகிறது. அதற்குக் காரணம் இந்தியாவில் 14ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த வைரக் கல் காலனி ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ்காரர்களால் திருடிச் செல்லப்பட்டது என்று பெரும்பாலான இந்தியர்கள் நம்புவதே ஆகும்.

தற்சமயம் எலிசபெத் மகாராணி இறந்து விட்டார். சார்ள்ஸ் அங்கு அரியணை ஏறியுள்ளார். ராணியின் முடியை அவர் சூடப்போவதில்லை எனவே முடியில் உள்ள கோஹினூர் வைரத்தை இந்தியா திருப்பிப் பெற்றுக்கொள்ள வேண்டும்-என்று இந்தியர்கள் கோருகின்றனர்.

எலிசபெத்தின் மறைவுக்கு அஞ்சலி வெளியிட்டிருக்கின்ற பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோர் கோஹினூர் வைரத்தை மீளப் பெறுவதற்கான கோரிக்கையையும் பிரிட்டிஷ் அரசிடம் விடுக்கவேண்டும் என்று கோருகின்ற சமூக ஊடகப் பதிவுகள் இந்தியா முழுவதும் புதிய பேசு பொருளாக – ரென்டிங்காக – மாறியுள்ளன.

இதேவேளை, கோஹினூர் வைரத்தை அணிவது மன்னர் சார்ள்ஸுக்குப் பெரும் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று இந்திய மதப் பிரமுகர் ஒருவர் கூறியிருக்கிறார். கோஹினூர் வைரத்தை வைத்திருந்த ஆட்சியாளர்களின் வாழ்க்கை வன்முறை, கொலைகள், அழிவுகள், சித்திரவதை மற்றும் துரோகம் ஆகியவற்றால் நிறைந்தது. கோஹினூர் வைரத்தின் சாபத்தை மக்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், கல்லின் வரலாறு மறுக்க முடியாதது – கோஹினூர் கல்லின் சாபம் அதை அணிபவர்களை சும்மா விடாது “-என்று அவர் எச்சரித்துள்ளார்.