இலங்கைக்கு மேலும் 65 மில்லியன் டொலர்களை வழங்குகிறது அமெரிக்கா

யு.எஸ்.எய்ட் நிர்வாகி சமந்தா பவரின் அண்மைய விஜயத்தின் தொடர்ச்சியாக, அமெரிக்காவானது USAID ஊடாக இலங்கைக்கு மேலதிகமாக 65 மில்லியன் டொலர்களை (23 பில்லியன் இலங்கை ரூபாவிற்கும் அதிகமான) ஒரு ஐந்தாண்டு காலப்பகுதியில் உதவியாக வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் இன்று அறிவித்தார்.

இந்த உதவியானது USAID இலங்கை மற்றும் மாலைதீவிற்கான செயற்பணிப் பணிப்பாளர்  கேப்ரியல் க்ராவ் மற்றும் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்த்தன ஆகியோரால் ஒப்பமிடப்பட்ட அபிவிருத்தி நோக்கங்களுக்கான உதவி ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

இந்த நிதியளிப்பானது இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு பதிலளிக்கும் வகையில் கடந்த வாரம் நிர்வாகி பவர் அறிவிப்புச்செய்த 60 மில்லியன் டொலர் (21 பில்லியன் இலங்கை ரூபாய்) பெறுமதியான புதிய மனிதாபிமான மற்றும் உரம் வழங்கும் உதவிகளுக்கு மேலதிகமாக வழங்கப்படுகிறது.

“அமெரிக்காவும் அமெரிக்க மக்களும் இலங்கை மக்கள் மற்றும் அரசாங்கத்துடனான தமது நீடித்த மற்றும் வலுவான பங்காண்மை தொடர்பில் பெருமிதம் கொள்கிறார்கள். நிலையான, செழிப்பான மற்றும் அமைதியான இலங்கையை முன்னேற்றுவதற்கு உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் முன்முயற்சிகளை ஆதரிப்பதில் நாங்கள் பூரண உறுதியுடன் உள்ளோம். அது அனைத்து நாடுகளும் இணைக்கப்பட்ட, செழிப்பான, மீள்தன்மையுடைய மற்றும் பாதுகாப்பான நிலையில் இருக்கக்கூடிய ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பகுதியை மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானதாகும்.” என இந்த புதிய இருதரப்பு உடன்படிக்கையின் ஆரம்பத்தினைக் கொண்டாடும் வகையில் தூதுவர் ஜூலி சங் குறிப்பிட்டார்.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) ஊடாக, சந்தை சார்ந்த வளர்ச்சி, சுற்றுச்சூழலின் நிலைபேறானதன்மை மற்றும் மீள்தன்மை மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை முன்னேற்றுவதற்கு இலங்கைக்கு உதவிசெய்ய அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது.

இலங்கைக்கான அனைத்து USAID நிதியளிப்புகளும் அன்பளிப்புகள் அல்லது மானியங்களாக வழங்கப்படுவதுடன் கடுமையான கண்காணிப்புத் தராதரங்களைக் கடைப்பிடிக்கும் உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அமெரிக்காவானது 1956 ஆம் ஆண்டு முதல் அபிவிருத்தி உதவிகளாக 2 பில்லியன் டொலர்களுக்கும் (சுமார் 720 பில்லியன் இலங்கை ரூபாய்) அதிகமான உதவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.