மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை பெறாமல் இலங்கை தப்பியதுதான் பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படை காரணம்.

ஐ.நா., அறிக்கை.

மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை பெறாமல் இலங்கை தப்பியதுதான் பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படை காரணம் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் கூறியுள்ளார்.

இலங்கையில் நிலவி வரும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிச்செல் பச்லெட் ஒரு அறிக்கை தயாரித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 51-வது கூட்டத்தொடர், ஜெனீவாவில் 12-ந் தேதி தொடங்கும் நிலையில், அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த கால, நிகழ்கால மனித உரிமை மீறல்களுக்கு தண்டனையில் இருந்து இலங்கை தப்பிய செயல், பொருளாதார குற்றங்கள், ஊழல் ஆகியவைதான் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படை காரணங்கள்.

இந்த சவால்களை சமாளிக்க அடிப்படை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். கடந்த கால மனித உரிமை மீறல்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு, கடுமையான பாதுகாப்பு சட்டங்களை சார்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும். அமைதியான போராட்டங்களை ஒடுக்கக்கூடாது. ராணுவமயமாக்கல் நடவடிக்கையை கைவிட வேண்டும். தண்டனையில் இருந்து தப்புவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாதுகாப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரின்போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டது உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் நடந்தன. இதற்கு இலங்கையை பொறுப்பேற்க வலியுறுத்தி கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது.

கடைசியாக கடந்த ஆண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே வருகிற 12-ந் தேதி தொடங்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து வெளிநாட்டு அமைப்புகள் விசாரணை நடத்துவதற்கான ஒரு வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.

23-ந் தேதி இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. அக்டோபர் 6-ந் தேதி, அதன் மீது ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.