37,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் அசந்து தூங்கிய விமானிகள்.

37,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் விமானிகள் தூங்கியதால், ‘ஆட்டோ பைலட்’ இயக்கியால் எத்தியோபியாவில் நடக்கவிருந்த அசம்பாவிதம் தவிக்கப்பட்டிருக்கிறது.

சூடான் நாட்டின் கார்டூம் நகரிலிருந்து எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் 100-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபபாவுக்கு புறப்பட்டு சென்றது.

இந்த விமானம் எத்தியோப்பியாவை நெருங்கி கொண்டிருந்த சமயத்தில் விமானத்தை இயக்கிய 2 விமானிகளும் விமானம் தானாக இயங்கும் ‘ஆட்டோ பைலட்’ இயக்கியை செயல்படுத்திவிட்டு தூங்கி விட்டனர். இதனால் அடிஸ் அபபா நகரில் உள்ள விமான நிலையத்தை அடைந்த பின்னரும் விமானம் தரையிறங்காமல் தொடர்ந்து பறந்து கொண்டே இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் பலமுறை விமானிகளை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் விமானிகளிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் பதற்றம் உருவானது. இதனிடையே 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் தரையிறங்க வேண்டிய இடத்தைக் கடந்து பயணித்ததால் ‘ஆட்டோ பைலட்’ துண்டிக்கப்பட்டு அபாய ஒலி எழுப்பப்பட்டது.

இதில் தூக்கத்தில் இருந்த 2 விமானிகளும் திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அபாயத்தை உணர்ந்த அவர்கள் சாதூர்யமாக செயல்பட்டு 25 நிமிட தாமதத்துக்கு பின்னர் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.