தமிழ்க் கடல் நெல்லை கண்ணன் காலமானார்.

தமிழ்க் கடல் என்று அழைக்கப்படும்  இலக்கிய பேச்சாளரும் பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல் நல குறையால் இன்று காலமானார்.

இலக்கியவாதியாகவும், பேச்சாளராகவும் புகழ்பெற்ற நெல்லைக் கண்ணன், 20-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் காமராஜர் உட்பட பல்வேறு தலைவர்களுடன் பயணித்த இவர், 3 முறை சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

நெல்லை தொகுதியில் இரு முறையும், சென்னை சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதியை எதிர்த்து ஒரு முறையும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.அண்மைக் காலமாக அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்காமல் விலகி இருந்த நெல்லைக் கண்ணன், பட்டிமன்ற பேச்சாளராகவும், சமய சொற்பொழிவு ஆற்றியும் வந்தார்.

இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டை கவுரவிக்கும் விதமாக 2022-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இளங்கோவடிகள் விருது வழங்கப்பட்டது. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.

பிறந்த ஊரின் மீது கொண்ட பற்று காரணமாக தனது பெயருக்கு முன்னால் ஊர் பெயரை வைத்துக்கொண்டார் நெல்லை கண்ணன். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால், நெல்லை டவுனில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். தற்போதுஇ அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நெல்லைக் கண்ணன் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.