குரங்கு அம்மை: நாய்க்குத் தொற்று எச்சரிக்கிறது WHO!

Kumarathasan Karthigesu

பாரிஸில் குரங்கு அம்மை நோயாளிகள் இருவரது வளர்ப்பு நாய்க்கு அந்த வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.குரங்கு அம்மை வைரஸ் மனிதரில் இருந்து விலங்குகளுக்கு – குறிப்பாக நாய்க்குத்-தொற்றியிருப்பது இதுவே முதல் முறை என்று உலக சுகாதார அமைப்பின் குரங்கு அம்மை தொடர்பான தொழில்நுட்ப இயக்குநர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

தொற்றாளர்கள் வளர்ப்புப் பிராணிகளிடம் இருந்தும் ஏனைய விலங்குகளிடம் இருந்தும் முற்றாக விலகி இருக்குமாறு சுகாதார நிறுவனம் கேட்டிருக்கிறது.

பொதுவாக வைரஸ் இனங்கள் விலங்குகளில் தொற்றுகின்ற போது ஆபத்தான புதிய பிறழ்வுகளை – மாறுதல்களை (dangerous mutation) எடுக்கின்றன. எனவே விலங்குகள் குறித்த விழிப்பு அவசியம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் புதியதொரு வாழ்க்கைச் சூழலுக்கு மாறும் போது அதற்கு ஏற்ப அது புதிய இனமாகத் தன்னை மாற்றிக் கொள்கிறது.வைரஸ் வீட்டு விலங்குகளை விட வெளியே ஏனைய உயிரினங்களில் தொற்றுவதே மிக ஆபத்தானது – என்று சுகாதார நிறுவன அதிகாரி கூறியுள்ளார்.

பாரிஸில் வசிக்கின்ற ஆண் ஒரினச் சேர்க்கத் தம்பதிகள் இருவரது இத்தாலி இனத்தைச் சேர்ந்த greyhound நாய் ஒன்றுக்கே குரங்கு அம்மை வைரஸ் தொற்றியுள்ளது. அவர்கள் இருவரும் கடந்த ஜூனில் தொற்றுக்கு இலக்காகி இருந்தனர்.

உலகின் பல நாடுகளில் குரங்கு அம்மை இதுவரை 31,600 பேருக்குத் தொற்றியுள்ளது. 12 பேர் அதனால் உயிரிழந்துள்ளனர்.