கடல் பகுதியை கண்காணிக்க இலங்கைக்கு விமானம் வழங்கியது இந்தியா.

கடந்த 2018-ம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே டெல்லியில் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்தை நடந்தது. அப்போது, கடல்பகுதி கண்காணிப்புக்கான 2 டோர்னியர் விமானங்களை வழங்க வேண்டும் என்று இலங்கை கோரியது. இந்நிலையில் இலங்கை கடற்படைக்கு ஒரு டோர்னியர் விமானத்தை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

கொழும்பு சர்வதேச விமான நிலையத்தையொட்டி உள்ள இலங்கை விமானப்படை தளத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றார். இந்தியா சார்பில், இலங்கைக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள கடற்படை துணைத் தளபதி எஸ்.என்.கோர்மடே, கொழும்பில் உள்ள இந்திய தூதர் கோபால் பாக்லே பங்கேற்றனர்.

‘பரஸ்பர புரிதல், நம்பிக்கை, ஒத்துழைப்பால் இந்திய-இலங்கை பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு புதிய பங்களிப்பாக, தற்போது இந்தியா வழங்கும் டோர்னியர் விமானம் அமைந்திருக்கிறது’ என்று கோபால் பாக்லே கூறினார்.

இந்த விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியையும் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையினருக்கு இந்தியா வழங்கியிருக்கிறது.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் 2 டோர்னியர் விமானங்களை இலங்கைக்கு இந்தியா வழங்க உள்ளது. அவ்வாறு வழங்கும்போது, தற்போது கொடுக்கப்பட்டுள்ள டோர்னியர் கடல்பகுதி கண்காணிப்பு விமானத்தை இந்திய கடற்படை திரும்பப்பெற்றுக்கொள்ளும்.

இலங்கை தன்னுடைய கடல்பகுதி கண்காணிப்பு திறனை மேம்படுத்துவதற்காக நீண்டகாலமாக கோரிவந்த டோர்னியர் விமானத்தை தனது சுதந்திர தினத்தன்று அந்நாட்டுக்கு இந்தியா வழங்கியிருக்கிறது. அதேவேளையில், இந்தியாவின் ஆட்சேபத்தை மீறி இலங்கை துறைமுகத்துக்குள் சீன உளவு கப்பலுக்கு இன்று அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இந்த நிகழ்வு நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.